வெள்ளி, 9 அக்டோபர், 2009

ஸ்கைப், வாய்ப் சேவைக்கு தடை- மத்திய அரசுக்கு ஐபி கோரிக்கை


ஸ்கைப் (Skype), வாய்ஃப் (VoIP) தொழில்நுட்பத்தை அளிக்கும் நிறுவனங்கள் ரகசிய குறியீடுகளை அளிக்க மறுத்ததை அடுத்து அவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என உளவுத் துறை (ஐபி),மத்திய அரசு க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரகசிய குறியீடுகள் கிடைக்காத காரணத்தால் தற்போது இந்த அழைப்புகள் எங்கிருந்து வருகிறது என்பதை உளவு துறையினரால் கண்டுபிடிக்க முடிவதில்லையாம். இதனால் தீவிரவாதிகள் இதை எளிதாக பயன்படுத்தி கொண்டு நாசவேலைகளில் ஈடுபடலாம். இந்த தொழில்நுட்பங்கள் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி விடு்ம் என்பதால் உளவு துறை இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளது.
இது உளவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது இந்தியாவில் வாய்ப், ஸ்கைப் போன்ற சேவைகள் மூலம் வரும் அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறியும் தொழில்நுட்பம் எதுவும் இல்லை. இதற்கு தேவையான தொழில்நுட்பங்களை கண்டறியும் வரை இந்த சேவைகளை மத்திய அரசின் தொலைதொடர்பு துறை தடை செய்ய வேண்டும்.
வாய்ப் மற்றும் ஸ்கைப் சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும் அழைப்புகளுக்கான தங்களது ரகசிய சங்கேத குறியீடுகளை வெளியிட மறுத்துவிட்டன. இதனால் எங்களால் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் பேச்சுகளை ஒட்டுக் கேட்க முடியவில்லை.  மேலும், அந்த அழைப்புகள் எந்த நாட்டில் இருந்து வருகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள சிஎல்ஐ (Caller Line Identification) இல்லாதது உளவுத் துறைக்கு பின்னடைவாக இருக்கிறது.
ஸ்கைப் சேவையை அளிக்கும் நிறுவனங்கள், அமெரிக்கா , சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடன் தங்களது ரகசிய சங்கேத குறியீடுகளை பகிர்ந்து கொள்கிறது. அதே போல் வாய்ப் அழைப்புகளை அறியும் தொழில்நுட்பங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது. வெளிநாடுகளில் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் அந்த அழைப்புகள் குறித்த தகவல்களை அரசுக்கு வழங்குகின்றன என கூறியுள்ளது.
மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் வாய்ப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் தங்களது தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இதனால் ஸ்கைப், வாய்ப், கூகுள் டாக் உள்ளிட்ட சேவைகளுக்கு விரைவில் இந்தியாவி்ல தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சேவையை பயன்படுத்தி குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு பேசி வரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 
கடந்த ஆண்டு மட்டும் இந்த சேவைகள் மூலம் இந்திய மக்கள் சுமார் 13 கோடி நிமிடங்கள் பேசியுள்ளனர் என டிராய் (TRAI) தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அரசு பொது மக்களுக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் இதற்கு ஒரு சுமூக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக