சனி, 14 நவம்பர், 2009
ரிசல்ட் குளறுபடிகளை தவிர்க்க ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 பரீட்சை: பள்ளி கல்வித்துறை பரிசீலனை.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் சிலர், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். விடைத்தாள் முறையாக திருத்தம் செய்யாததால் கடந்த ஆண்டு தேர்வு முடிவால் பல மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கவலை அடைந்தனர்.
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கவனக்குறைவு, அலட்சிய போக்கால் மதிப்பெண்கள் குறைந்து, மேல்படிப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களை அழைத்து தேர்வுத்துறை எச்சரித்தபோது அவர்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
குறுகிய காலத்தில் நிறைய விடைத்தாள்களை திருத்துவதால் தவறு நடப்பதாகவும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் தனித்தனியாக நடந்து ஒரு மாதம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுதாகவும் அதனால் தங்களுக்க கோடை விடுமுறை கிடைப்பது இல்லை என்றும் குற்றம்சாட்டினர். தொடர் வேலை, இந்த தவறுகளுக்கு காரணம் என்று கருத்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்வு முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசு தேர்வுத்துறை ஆலோசித்தது. தற்போது பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 18-ந்தேதி வாக்கில் தொடங்குகிறது. பொதுத்தேர்வை ஒரே நேரத்தில் நடத்தினால் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்படாது, தேர்வை முன் கூட்டியே நடத்தி முடித்துவிட்டால் இந்த தவறுகள் நடக்காது என்று பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்கிறது.
மார்ச் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடித்தால் முடிவுகள் சீக்கிரமாக வரும். விடைத்தாள் திருத்துவதற்கு கால அவகாசம் கொடுத்து பிழையின்றி தேர்வு முடிவு வெளியிடலாம் என கருதுகிறது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் கலந்தாய்வு, மருத்துவ கவுன்சிலிங் ஆகியவை முன்கூட்டியே நடத்தலாம். இதனால் மாணவ- மாணவிகள் மேல் படிப்பு தொடர்வதில் எந்தவித சிரமமும் ஏற்படாது.
சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து படிப்பதும் எளிது. ரேங்க் பட்டியலில் வரும் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து படிப்பதற்கு எளிது. பிளஸ்-1 படிக்க செல்லும் மாணவர்களும் முன்கூட்டியே சிறந்த குரூப்களை தெரிவு செய்ய முடியும் என பல்வேறு கோணங்களில் தேர்வுத்துறை ஆலோசித்து அரசுக்கு தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்தினால் சாதக, பாதக விளைவுகள் குறித்து அறிக்கை வழங்கும்படி பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு தேர்வுத்துறையிடம் கேட்டுள்ளார்.
2 அரசு தேர்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தி மார்ச் மாதத்தில் முடிக்கலாம். அப்படி தேர்வு நடத்தினால் எல்லாபணிகளும் முன் கூட்டியே நடைபெறும். 10, 12-ம் வகுப்பு துணை தேர்வு கூட முன்னதாக நடத்தி முடிக்கலாம் எனவும் கருத்துக்கள் வழங்கப் பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு அரசு தேர்வுகள் இரண்டுமே ஒரே நேரத்தில் நடக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
தேர்வு முடிவுகள் பிழை இல்லாமல் வெளியிட இந்த திட்டம் கைகொடுக்கும் என்று அரசு தேர்வுத்துறை நம்புகிறது.

0 comments:
கருத்துரையிடுக