குருபீடம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் தரைமட்ட விலைக்கு வங்கிகள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக பத்து வங்கிகள் திவாலாகிக் கொண்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 120 வங்கிகள் திவாலாகியுள்ளன. நவம்பர் 6 அன்று மட்டும் யுனைடெட் செகுரிட்டி, ஹோம் பெடரல், பிராஸ்பரன், கேட்வே, யுனைடெட் கமர்சியல் ஆகிய ஐந்து வங்கிகள் கஜானா காலி என்று அறிவித்தன. ஜூலை மாதத்தில் மட்டும் 24 வங்கிகள் மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு சென்றன. இதுதான் அதிகமான வங்கிகள் திவாலான மாதமாகும். அதற்கடுத்ததாக அக்டோபர் மாதத்தில் 20 வங்கிகள் திவாலாகின.
தற்போதைய நெருக்கடி ஏற்பட்டதாகக்கூறப்படும் 2008 ஆம் ஆண்டில் 25 வங்கிகள் திவாலாகின. அமெரிக்காவில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இவற்றில் சுமார் ஐநூறு வங்கிகள் நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களே தெரிவிக்கின்றன. இந்த வங்கிகளில் உள்ள சேமிப்புக்கு அமெரிக்க மத்தியக் காப்பீட்டுக்கழகம் காப்பீட்டு சேவையை வழங்குகிறது. இதனால் திவாலாகும் வங்கிகளின் இழப்புகளை இந்தக்கழகம் ஈடுகட்டுகிறது. இரண்டாண்டுகளில் திவாலாகியுள்ள 145 வங்கிகள் இந்தக்கழகத்தின் பொறுப்பில்தான் இருக்கின்றன. நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள திவால்களை சரிசெய்வதற்காக மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அமெரிக்க காப்பீட்டுக்கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஆட்சியாளர்கள் மட்டுமே நெருக்கடி தீர்ந்துவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் இப்போதைக்கு நெருக்கடி தீர்வதற்கான அறிகுறிகள் தென்படாததால் திவாலாவது தொடர்கதையாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் அமெரிக்கக் காப்பீட்டு கழகத்தின் இழப்பு 5 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுவிடும் என்று நிதித்துறை வல்லுநர்கள் கணித்துள்ளார்கள். எவ்வளவு தூரத்திற்கு காப்பீட்டுக்கழகம் தாங்கிக் கொள்ள முடியும் என்பது பற்றியும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் என்ன.. அரசிடமிருந்து வாங்கிக்கொண்டால் போச்சு என்று அக்கழகத்தின் வட்டாரம் கூறுகிறது. ஏற்கெனவே முழி பிதுங்கிப் போயிருக்கும் அமெரிக்க அரசு இதைச் செய்ய முடியுமா என்பது தெளிவாக இல்லை.
நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் வங்கிகள் திவால் ஆவதின் வேகம் குறைந்ததுபோல் இருந்தது. ஆனால் ஜூலையிலிருந்து மீண்டும் படுவேகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வங்கிகள் சரிந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருப்பதால் நடப்பாண்டிலேயே திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 150யைத் தொட்டு விடலாம் என்கிறார்கள். அமெரிக்க வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதும் வங்கிகள் திவாலாவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வேலையிழந்துவிடுவதால் வங்கிகளில் வாங்கியிருந்த கடன்களைச் செலுத்தாமல் பலரும் விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை வங்கிகளை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் பத்து சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர். இவர்களால் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கடன்கள் வாராக்கடன் பட்டியலுக்கு சென்று விடுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர். அதனால் இவர்களின் வங்கிக்கணக்கும், கடன்களும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கிகளிலேயே உள்ளன. வேலையிழப்புக்கும், சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் அதிவிரைவில் திவாலாகி வருவதற்கும், தொடர்பு உள்ளதற்கும் இதுவே காரணமாகும். வேலையிழப்பு அதிகரிக்க, அதிகரிக்க வங்கிகள் திவாலாவது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்வசம் வந்துசேர்ந்திருக்கும் வங்கிகளை யார் தலையில் கட்டுவது என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது அமெரிக்க மத்தியக் காப்பீட்டுக்கழகம். 1992 ஆம் ஆண்டில் 181 வங்கிகள் திவாலானபோதும் இத்தகைய உத்திகள்தான் கடைப்பிடிக்கப்பட்டன. லாபம்... லாபம்... லாபம் என்று முணுமுணுத்துக் கொண்டே இந்த வங்கிகளின் நிர்வாகங்கள் செயல்பட்டதுதான் தற்போதைய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஊதி ஊதிப் பெருக்கினால் தாங்காமல் ஒரு கட்டத்தில் உடைந்தே விடும் என்பதைத் தெரிந்து கொண்டேதான் இந்த அமெரிக்க நிதி நிறுவனங்கள் இயங்கி வந்தன. முதலில் நெருக்கடியை வங்கிகள் உருவாக்கின. தற்போது அந்த நெருக்கடி வங்கிகளை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.
நன்றி: தீக்கதிர்
0 comments:
கருத்துரையிடுக