புதன், 16 டிசம்பர், 2009

13 வயதிலேயே குடும்ப தலைவன்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கூடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனைப் பிடித்து விசாரித்தனர். சிறுவனின் பாக்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட வளர்ப்பு பறவைகள் விற்பதாக தெரிவித்தான். 13 வயதில் வியாபாரமா? அதுவும் தனி ஒருவனாகவா? நம்ப முடியாமல் போலீசார், அவனை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய நேரத்தில், வேலூருக்கு செல்லும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் போலீசாரிடம் ஓடி வந்தனர்.
ÔÔசார்.. இவனை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். தினமும் எங்க வண்டியிலதான் வருவான். நல்ல பையன் சார். வளர்ப்பு பறவைகள் விற்கிறதுதான் இவனோட தொழில். தப்பான பையன் இல்ல சார்ÕÕ என்றனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஒரு குழந்தை தொழிலாளியின் சோகமான கதை தெரியவந்தது. மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலு (40). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி எலீசா.
இவர்களுக்கு சதீஷ் (13), மகாதேவி (13) என்ற இரட்டைக் குழந்தைகள் மற்றும் காயத்ரி (9), வீரமணி (7) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். மகாதேவி, மூளை வளர்ச்சி குன்றியவர். கடந்த ஓராண்டுக்கு முன்பு, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் எலீசா பிரிந்து சென்றார்.
கோட்டூர் தோட்டத்தில் வசிக்கும் வேலுவின் தாய் லட்சுமி வீட்டில் பிள்ளைகள் வளர்ந்தனர். குடும்பம் நடத்த வருமானம் போதாததால் வேலு, தனது மூத்த மகன் சதீஷுடன் சேர்ந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்தார். ஆற்காடு அருகே சக்கரமல்லூர் ஏரிக்கரையில் இருவரும் குடியேறினர்.
வேலு தெரிந்த தொழிலான செருப்பு தைப்பதை கையில் எடுக்க, சதீஷுக்கு ஏதாவது தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும், அப்பாவுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. யோசித்ததில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் கலர் கோழிக்குஞ்சுகள், லவ்பேர்ட்ஸ்கள், கிளி உள்ளிட்ட வீட்டில் வளர்க்கும் பறவைகள் கிடைப்பதை அறிந்தான்.
அவற்றை விலை குறைத்து வாங்கி, சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து ரெட்டை ஏரி, மூலக்கடை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சிக்னல்களில் பறவைகளை கூவிக் கூவி விற்பான். ஓரளவு வருமானம் கிடைத்தது. இதையே முழுநேர தொழிலாக மாற்றிக்கொண்ட சதீஷ், கிடைத்த வருமானத்தில் மாதா மாதம் தம்பி, தங்கைகளின் உணவு மற்றும் படிப்பு செலவுக்காக ரூ.3 ஆயிரம் அனுப்புவதை வழக்கமாக்கி கொண்டான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இளம் குற்றவாளிகள் பெருகி வரும் நிலையில், நேர்மையாக சம்பாதிப்பதோடு, தனது வருமானத்தில் குடும்பத்தையும் காப்பாற்றி வரும் 13 வயது சதீஷை போலீசார் தட்டிக் கொடுத்து பாராட்டி அனுப்பினர்.

0 comments:

கருத்துரையிடுக