சனி, 19 டிசம்பர், 2009
ஈ.டி.ஏ. உட்பட சென்னை நிறுவனங்களை தாக்கும் துபாய் நிதி நெருக்கடி சூறாவளி
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் உலக வர்த்தக உலகையே உலுக்கிய துபாய் நிதி நெருக்கடி எனும் சூறாவளியின் தாக்கங்களின் எச்சங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் பாதிப்புகள் தென்னிந்தியாவில் உள்ள நிறுவனங்களை குறிப்பாக சென்னையை தளமாய் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் எதிரொலிக்கின்றன.
சென்னையில் இயங்கும் ஈ.டி.ஏ. ஸ்டார் குழுமம் துபாய் நிதி நெருக்கடியில் பாதிக்கப்படும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும். சென்னையை தளமாக கொண்டு செயல்படும் பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் பங்களிப்புடன் நடத்தப்படும் ஈ.டி.ஏ. ஸ்டார் குழுமம் துபாயில் பணி செய்த கட்டுமான திட்டங்களுக்கு சுமார் 800 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 10,000 கோடி) பணம் பாக்கி உள்ளது. மெட்ரோ ரயில், பர்ஜ் துபாய் உட்பட ஈ.டி.ஏ பணிபுரிந்த பல பெரிய திட்டங்களின் உரிமையாளர்கள் நகீல், துபாய் வேர்ல்டு என துபாய் அரசாங்கத்தின் அங்கங்களாக இருப்பதால் அதில் எத்துணை சதவிகித அளவு பணம் கிடைக்கும் என்பது நிச்சயமற்றதாக உள்ளது.
ஈ.டி.ஏ குழுமம் தமிழகத்திலும் தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ஷாப்பிங் மாலான சென்னை சிட்டி சென்டர், ஜெமினி மேம்பாலம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா லைட் ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், அரசாங்க பொது மருத்துவமனை, கோடம்பாக்கம் மேம்பாலம், ரஹேஜா டவர்ஸ் உள்ளிட்ட பல கட்டுமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றது. புதிய சட்டசபை வளாகம் உள்ளிட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்க திட்டங்களை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்டரக்ஷன் ஈ.டி.ஏ. குழுமத்தின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இக்குழுமம் மத்திய கிழக்கை விட இந்தியாவில் அதிக திட்டங்களை நிறைவேற்ற வருங்காலத்தில் திட்டமிட்டுள்ளது.
சென்னையை தளமாக கொண்டு செயல்படும் இன்னொரு நிறுவனமான நேஷனல் அஸ்பால்ட் ப்ராடக்ட்ஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைவர் வருண் மணியன் இது குறித்து கூறும் போது வருங்காலத்தில் எங்கள் இலக்கை துபாயிலிருந்து ஏற்கனவே எங்கள் நிறுவனத்தின் மெஷினரிகள், க்ரேன்கள் உள்ளிட்டவைகளை அபுதாபிக்கு மாற்றி விட்டோம். ஈமார் உள்ளிட்ட எங்கள் வாடிக்கையாளர்கள் தாங்கள் தர வேண்டிய தொகையில் மிகுதியான கழிவு கேட்கின்றனர். அப்படி கழிவு கொடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நட்டப்பட வேண்டியது தான் என்றார். இது போல் துபாயில் நிறைய இந்தியர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக