மத்திய அரசுக்கு சொந்தமாக ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் என இரண்டு விமான நிறுவனங்கள் இருந்தன. இவை இரண்டும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. வெளிநாடுகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனமும், உள்நாட்டு விமான சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் கவனித்து வந்தன. கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் போது 2007ம் ஆண்டு அப்போதைய விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் முயற்சியின் பலனாக இந்த இரண்டு நிறுவனங்களும்
ஊழியர்களின் கடும் எதிர்ப்பை மீறி ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார தேக்க நிலை காரணமாக உலக அளவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன. பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானிலும் தனியார் விமான நிறுவனம் ஒன்று நேற்று திவாலானது. இந்தியாவில் பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பொருளாதார தேக்க நிலை கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, பைலட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வரை சென்றது. இதை தொடர்ந்து மத்திய அரசு தலையிட்டு ரூ. 5 ஆயிரம் கோடி கடனாக கொடுக்க முன்வந்தது.
இந்நிலையில் ஏர்இந்தியா நிறுவனத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்சை பிரிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்துவிட்டதாக ஏர்இந்தியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த தகவலை மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் மறுத்துள்ளார். ஆனால் பிரிவினை உறுதி என நிதி அமைச்சக அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக