ஞாயிறு, 31 ஜனவரி, 2010

ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்: தலைமை நீதிபதி!

பரவி வரும் ஆபாச இணையதளங்களை தடுத்தி நிறுத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் சைபர் சட்ட அமலாக்க திட்டம் மற்றும் தேசிய அளவிலான விவாதக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசுகையில், 'ஆபாசமான, அருவருப்பான படங்கள் மற்றும் விரும்பத்தகாத விஷயங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு அரசு தடை விதிக்கலாம்.

பல்வேறு ஆக்கப்பூர்வமான காரணங்களுக்காக இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை அசிங்கமானவற்றுக்காகவும் இயங்குகின்றன. பல நேரங்களில் பல ஆசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் போன்றோரின் அறிவுசார் சொத்துரிமை பறிக்கப்படும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. நிதி தொடர்பான முறைகேடுகள், வணிக ஏமாற்று வேலைகள் என ஏராளமான குற்றங்களின் தளமாக பல இணையதளங்கள் பயன்படுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம்.
எனவே, சைபர் குற்றத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றும் போது இணையதள பயனாளிகளை தனி நபர், சேவை வழங்குவோர், இணையதளத்தை இயக்குவோர் என பயன்படுத்துவோரை பகுத்து ஆராய்ந்து தனித்தனி சட்டங்களை அமலாக்க வேண்டும். பல அப்பாவி பயனாளிகள் அசிங்கமான இமெயில்கள் சம்மந்தமில்லாத நபர்களிடமிருந்து வரும்போது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
வேலை மற்றும் திருமணத்துக்காக பலர் அப்பாவித்தனமாக தங்களின் உண்மையான தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த தகவல்கள் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. தேவையற்ற வணிக தொடர்பான இமெயில்கள் ஒருபுறமிருக்க, இளம் வயதினரின் பாலினம் குடும்ப பின்னணி போன்றவற்றின் தகவல்கள் தீய நோக்கத்துடன் உபயோகப்படுத்தப்படுகின்றன' என குறிப்பிட்டார்.
சைபர் குற்றங்களை சமாளிக்க தனி சட்டம்: இதேபோல, சைபர் குற்றங்களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வலியுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில்,'சைபர் குற்றங்களை தடுக்க தற்போதுள்ள தகவல்தொழில் நுட்ப சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதால் தீர்வு கிடைக்காது. அதற்கென பிரத்தியேகமான தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். மேலும் சைபர் குற்ற விவகாரங்களை கண்காணிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தகுதி வாய்ந்த தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும். வெறும் சட்டங்களை இயற்றுவதன் மூலம் மட்டுமே இவ்வகை குற்றங்களை தடுத்துவிட முடியாது. அவை நிறுவனங்களை அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது.
சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திறமையாக அமலாக்கவும், கையாளவும் தனி அமைப்பை உருவாக்குவதே பலன் தரும். அந்த அமைப்பில் திறமை வாயந்தவர் இடம் பெற வேண்டும்.
அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகள் இத்தகைய அமைப்பை கொண்டிருக்கின்றன. சைபர் குற்றங்கள் இந்தியா எதிர்கொள்ளும் புது சிக்கல்கள் என்பதால் இங்கு அனுபவமும், திறனும் வாய்ந்த நிபுணர்கள் குறைவு. தனியார் நிறுவனங்கள் கூட சைபர் குற்றங்களை எதிர்கொள்வதில் திணறிக்கொண்டு தான் இருக்கின்றன. எனவே சிறப்பு பயிற்சியும், தகுதியும் பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தியாக வேண்டும்' என்றார்.

0 comments:

கருத்துரையிடுக