திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவர் தீபாவளி விடுமுறை தினத்தன்று பள்ளி வளாகத்தில் மது அருந்தினார். இதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் தீபாவளி விடுமுறைக்கு பின்பு அந்த மாணவரை பள்ளியில் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த மாணவர் தன்னை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் தனது வக்கீல் ஜோயல் பவுல் அந்தோணி மூலம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட மாணவர், அவருடைய பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
விசாரணையின் போது மாணவர், தன் தவறுக்காக வருந்துவதாகவும், இனிமேல் இதுபோன்று தவறு செய்ய மாட்டேன் என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
அப்போது மாணவரின் பெற்றோர் கூறுகையில், என்ன நடந்தது என்பதை எங்களால் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு 17 வயது தான் ஆகிறது. விரைவில் தேர்வு நடக்க உள்ளது. பள்ளியில் அவனை அனுமதிக்காவிட்டால் எதிர்காலம் பாதிக்கும் என்று வேண்டினர்.
பின்னர் நீதிபதி கூறுகையில், மாணவரைப் பொருத்த அளவில் கடந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும் போது வருகைப் பதிவு சிறப்பாக இருந்துள்ளது. பருவ வயது காரணமாக அவர் தவறு செய்து இருக்கலாம். மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட திரைப்படங்கள் தான் காரணம். இது எனது தனிப்பட்ட கருத்து.
செல்போன் மிகச்சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. ஆனால் அதை இளைஞர்கள் பலர் ஆபாசத்துக்காக பயன்படுத்துகின்றனர். சட்டமும், பெற்றோரும் அதை அனுமதிக்கவில்லை.
இந்த மாணவரை பொருத்தமட்டில் அப்போதைய சூழ்நிலை தான் அவரை தவறு செய்யத் தூண்டியுள்ளது. அவரை தண்டித்தால் எதிர்காலம் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் அவர் மிகப் பெரிய மனிதராக உருவாகலாம். மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க போதுமான வருகைப் பதிவு உள்ளதா? ஒருவேளை அதுபோன்று வருகைப் பதிவு இல்லாத பட்சத்தில் ஏதாவது விதிவிலக்கு அளித்து தேர்வு எழுத அனுமதிக்க முடியுமா என்பது குறித்து திருச்சி முதன்மை கல்வி அதிகாரி, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து தெரிவிக்குமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார் நீதிபதி. பிறகு வழக்கு விசாரணை வருகிற 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக