சனி, 23 ஜனவரி, 2010

அடையாள அட்டையில் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்துக்கு எதிரானதாக கருதும் முஸ்லிம் பெண்கள், ஓட்டு போடாமலே கூட விட்டுவிடலாம்!


வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்துக்கு எதிரானதாக கருதும் முஸ்லிம் பெண்கள், ஓட்டு போடாமலே கூட விட்டுவிடலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம். பர்தா, ஹிஜாப் அணியாத பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது ஐதீகம்.

ஆனால், ஹிஜாப் அணியாமல் முஸ்லிம் பெண்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு ஊர் முழுவதும் காட்டுகிறது.
இந்திய பிரஜைகளுக்கு விருப்பமான மத வழிபாட்டு முறைகளை சுதந்திரமாக பின்பற்ற வழி செய்யும், அரசியல் சட்டப்பிரிவு 25ன் படி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது. எனவே முஸ்லிம் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். முஸ்லிம் பெண் வாக்காளர்களை முகத்தை மூடியபடி புகைப்படம் எடுக்கவேண்டும் அல்லது ஹிஜாப் இல்லாமல் எடுக்கும் படத்தை பொது பார்வைக்கு வைக்கக் கூடாது' என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியார் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், 'வாக்காளர் அட்டைக்கே இவ்வாறு வருத்தப்படுகிறீர்களே, தேர்தலில் போட்டியிட்டால் என்னவாகும் என புரியவில்லை?
தேர்தலில் தொகுதி முழுக்க வேட்பாளர்களின் புகைப்படத்தை வீதி வீதியாக ஒட்டுவார்கள். அப்போது என்ன செய்வீர்கள்? வாக்காளர் பட்டியலிலோ, அடையாள அட்டையிலோ தங்கள் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்தை மீறயது என அந்த பெண்கள் கருதினால், ஓட்டு போடலாமா வேண்டாமா என்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அந்தளவுக்கு அவர்கள் மத உணர்வோடு இருக்கிற பட்சத்தில், ஓட்டு போட வேண்டாம்' என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
முன்னதாக மனுதாரருக்கு எதிராக தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான பாலாஜி ஸ்ரீநிவாசன், 'மனுதாரர் அடிப்படையையே குழப்பப் பார்க்கிறார். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா என எல்லா மாநிலத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அனைத்து மாநிலத்திலும் இதேபோலத் தான் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் எங்கேயும் இதுபோன்ற ஒரு பிரச்னையை யாரும் எழுப்பவில்லை. முஸ்லிம் பெண்கள் பாஸ்போர்ட் எடுக்கும் போது புகைப்படம் எடுப்பது மத உணர்வை புண்படுத்துவதாக இல்லையா' என வாதிட்டார்.
ஏற்கனவே 2006ம் ஆண்டில் அஜ்மல்கான் இதே விவகாரத்துடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக