திங்கள், 8 பிப்ரவரி, 2010

முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: ஆந்திர சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

ஹைதராபாத்: அரசுப் பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிற்ப்பித்த உத்தரவை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு அரசுப் பணிகளில் ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி கடந்த 2004ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. பின்னர் ஆட்சி அமைந்தவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத வரம்பை தாண்டும் வகையில் மாநில அரசின் உத்தரவு இருப்பதாக உயர்நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.
அதேசமயம், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பல்வேறு ஆய்வுகள் மற்றும் பரிசீலனைகளை மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் 4 சதவீத ஒதுக்கீடு வழங்கலாம் என மாநில அரசுக்கு பரிந்துரை அளித்தது.இந்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2007ம் ஆண்டில் இதற்கான அரசாணையை ஆந்திர அரசு பிறப்பித்தது.இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து, வக்கீல் கொண்டல்ராவ் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி அனில் ரமேஷ் தாவே தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நடந்து வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடிந்ததை அடுத்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆந்திர அரசின் 4 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

0 comments:

கருத்துரையிடுக