ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
புனே குண்டுவெடிப்புக்கு ஹெட்லி காரணமாக இருக்கலாம் - ப.சிதம்பரம்!
புனே, ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்புக்கு டேவிட் கோல்மேன் ஹெட்லியே காரணமாக இருக்கலாம். அவனது ஆட்கள்தான் இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார் ஹெட்லி தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கர் ஆவார். இதுகுறித்து இன்று ப.சிதம்பரம் கூறுகையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள ஓஷோ ஆசிரமம், யூதர்களின் சபாத் இல்லத்தை ஹெட்லி இரண்டு முறை உளவு பார்த்துள்ளான். மேலும், இங்கு தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்தும் அவன் ஆய்வு செய்துள்ளான்.
இது அனைவருக்கும் தெரிந்த விவரங்கள். எனவே ஹெட்லியை அதிகம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. அவனது திட்டத்தை சிலர் நிறைவேற்றியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணை விரைவாக நடந்து வருகிறது. இப்போதைக்கு எதையும் நிராகரிக்கவில்லை, அதேபோல எதையும் ஏற்கவும் இல்லை. விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே எதுவும் உறுதியாகத் தெரிய வரும் என்றார் ப.சிதம்பரம்.
உளவுத்துறை தோல்வி காரணமல்ல
முன்னதாக செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஜெர்மன் பேக்கரிக்கு வந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். தாங்கள் கொண்டு வந்த வெடிகுண்டுப் பையை ஒரு டேபிளுக்குக் கீழ் வைத்து விட்டு அந்த நபர்கள் அங்கிருந்து நழுவியிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். இறந்த சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் ப.சிதம்பரம். உளவுத்துறை சதித் திட்டத்தை கண்டுபிடிக்கத் தவறி விட்டதா என்ற கேள்விக்கு சிதம்பரம் பதிலளிக்கையில், அப்படிக் கூற முடியாது. உளவுத்துறையின் தவறு எதுவும் இதில் இல்லை. தீவிரவாதிகளுக்கு சாதகமாக சில பலவீனமான அம்சங்கள் இருந்திருக்கும். அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஷாருக் கான் படத்துக்குப் பாதுகாப்பு போலீஸார் அத்தனை பேரும் தியேட்டர்களுக்குப் போனது தாக்குதல் நடக்க முக்கியக் காரணமா என்ற கேள்விக்கு, இந்தப் பகுதியிலிருந்து போலீஸார் யாரும் தியேட்டர் பாதுகாப்புக்கு அனுப்பப்படவில்லை என்றார் சிதம்பரம். புனே சம்பவத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். முன்னதாக நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். 9 பேர் கொல்லப்பட்டுள்ளது மிகுந்த வேதனை தருகிறது. மக்கள் அமைதி காக்க வேண்டும்.
கடந்த 14 மாதங்களில் இது முதல் முக்கிய தாக்குதலாகும். அனைவரும் அமைதி காத்து பாதுகாப்புப் படையினருக்கும், அரசுகளுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். மீடியாக்களும் ஊகச் செய்திகளை வெளியிடாமல், அதிகாரப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை நானே முறையாக அறிக்கை அளிக்கிறேன் என்றார் சிதம்பரம்.
0 comments:
கருத்துரையிடுக