புதன், 24 பிப்ரவரி, 2010
உயிருக்குப் போராடும் பலஸ்தீன் பேராசிரியரை விடுதலைசெய்யுமாறு அஹ்ரார் அமைப்பு கோரிக்கை
ரமல்லா – சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகள் மற்றும் மனிதஉரிமைகளுக்கான அஹ்ரார் அமைப்பு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் இஸாம் அல் அஷ்கரை உடனடியாக விடுவிக்கக்கோரி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச ஸ்தாபனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (19.02.2010) அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் ஹஃப்ஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பௌதீகவியல் பேராசிரியர் அஷ்கர், தொடர்ச்சியான உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு என்பவற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டுக்குச் சேவையாற்றி அதனைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட விடாமல் பலஸ்தீன் விஞ்ஞானிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை தடுத்துவைத்துள்ளது என ஹஃப்ஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுவரை காலமும் எத்தகைய குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அஷ்கரின் தடுப்புக்காவலை தொடர்ந்தும் நீடிக்குமுகமாக இஸ்ரேலிய வழக்குமன்றத் தலைவரை (நீதிபதி?!!) மருத்துவமனைக் கட்டிலுக்கே அழைத்துவந்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலை அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பேராசிரியர் அஷ்கரை மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வழக்குமன்றத் தலைவர் (நீதிபதி?!!), ‘இங்கு பெறப்பட்டுள்ள பல்வேறு மருத்துவச் சான்றிதழ்களின் மூலம் உங்கள் தற்போதைய உடல்நிலை குறித்தும், பல்வேறுபட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகளால் நீங்கள் துன்புற்றுவருவது குறித்தும் நான் நன்கறிவேன். என்றாலும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யுமுகமாக உங்களை நான் சிறையிலடைத்துத்தான் ஆகவேண்டும்’ என்று தெரிவித்திருப்பதாக ஃபுவாத் அல் ஹஃபஃஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக