சனி, 27 மார்ச், 2010

எஸ்ஐடி முன்பு மோடி ஆஜர்: 3 மணி நேரம் விசாரணை.

குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாப்ரி உள்பட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்கு இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜரானார். ஆனால் விசாரணைக் குழுத் தலைவர் ஆர்.கே.ராகவன் அப்போது இல்லை.
2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டியில் ஜாப்ரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மோடிக்கு தொடர்பு உண்டு. அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜாப்ரியின் மனைவி ஜாகியா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது விசாரணையை மேற்கொண்டு பல்வேறு ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் சேகரித்தது.
இதன் அடிப்படையில் நரேந்திர மோடியை நேரில் விசாரிக்க முடிவு செய்து சம்மன் அனுப்பியது. மார்ச் 21ம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அன்று மோடி ஆஜராகவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், மார்ச் 21ம் தேதி ஆஜராக வேண்டும் என்று எஸ்ஐடி கூறவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், மோடியின் வழக்கறிஞர் கூறுகையில், மார்ச் 27ம் தேதி ஆஜராகுமாறு கூறித்தான் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி இன்று மோடி பழைய தலைமைச் செயலக கட்டட வளாகத்தில் உள்ள எஸ்.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் இப்போதுதான் முதல் முறையாக நரேந்திர மோடிக்கு விசாரணைக்கு உட்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக் குழுவின் முன்பு மோடி ஆஜரானபோது குழுவின் தலைவரான ஆர்.கே.ராகவன் அங்கு இல்லை. பதிலாக, விசாரணைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஏ.கே.மல்ஹோத்ராதான் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடந்தது. தொடர்ந்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. மோடியிடம் விசாரணை நடத்திய மல்ஹோத்ராதான் குல்பர்க சொசைட்டி படுகொலை சம்பவம் குறித்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இன்றைய விசாரணையின்போது மல்ஹோத்ராவும், மோடியும் மட்டுமே அந்த அறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கலவரம் வெடித்தது. அன்றைய தினம் உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் விட வேண்டும், கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக ஒரு புகார் உள்ளது. அதுகுறித்து இன்றைய விசாரணையின்போது மோடியிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது. மோடி மீதான விசாரணை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை. இதில் பாஜகவை சம்பந்தப்படுத்துவது நியாயமற்றது. 
மோடிதான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பாஜகவுக்கு இதில் தொடர்பில்லை என்றார் கோவிந்த். எஸ்.ஐ.டி. தலைவர் ஆர்.கே.ராகவன் இன்று காந்தி நகரிலேயே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. ராகவன் தலைமையிலான குழுவில் மொத்தம் ஐந்து பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் குல்பர்க் சொசைட்டி சம்பவம் உள்பட மொத்தம் 9 வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக