சனி, 27 மார்ச், 2010

'பாபர் மசூதி இடிப்பு-வேடிக்கை பார்த்தார் அத்வானி': பெண் ஐபிஎஸ் அதிகாரி சாட்சியம்


பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை. மாறாக அவர்தான் பாபர் மசூதியை இடிக்கத் தூண்டும் வகையில் பேசினார். மசூதி இடிக்கப்பட்டு விழுந்தபோது அவரும், இதர சங் பரி்வார் தலைவர்களும் இனிப்பு வழங்கி, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியைக் கொண்டாடினர் என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா, அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய உதவி எஸ்.பியாக இருந்த அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். தற்போது டிஐஜியாக உள்ள அஞ்சு, டெல்லியில் 'ரா' பிரிவில் பணியாற்றி வருகிறார். பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 'சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார். 
ஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது. அப்போது அத்வானியின் முகத்தில் உற்சாகம் வெடித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தினரைப் பார்த்து அவர் கூறுகையில், இதே இடத்தில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும் என்று தீர்மானமாகக் கூறினார். அவரது இந்த தூண்டுவிக்கும் பேச்சுக்கு சங் பரிவார் தலைவர்களும், கூடியிருந்த கூட்டத்தினரும் கைகளைத் தட்டி வரவேற்பு அளித்தனர். இந்தக் கூட்டத்தில் அத்வானி தவிர வினய் கட்டியார், உமா பாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோரும் பேசினர் என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டுப்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.
ஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில், 'அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.

இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்:
கரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர் என்று கூறியுள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் அஞ்சு வாக்குமூலம் அளிக்க வந்தார். வாக்குமூலம் அளித்து முடிந்ததைத் தொடர்ந்து வழக்கு ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று அஞ்சுவிடம் குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது. பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இதையடுத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பரா ஆகியோர் மீது 1993ம் ஆண்டு சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
தூண்டி விடும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டி விட்டது, சதித் திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. பின்னர் 2003ம் ஆண்டு சதித் திட்ட புகார் கைவிடப்பட்டு, அதிலிருந்து அத்வானி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் 2005ம் ஆண்டு ஜூலை மாதம், அத்வானி மீதான பல்வேறு புகார்களை மீண்டும் சுமத்த உத்தரவிட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம். 
இதற்கு முக்கியக் காரணம், 1993ம் ஆண்டு அஞ்சு குப்தா சிபிஐக்கு அளித்த வாக்குமூலம்தான். இந்த நிலையில் தற்போது இன்று அஞ்சு குப்தா தனது வாக்குமூலத்தை உறுதிப்படுத்தி கோர்ட்டில் அளித்துள்ள சாட்சியம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. 
1993ம் ஆண்டு அஞ்சு குப்தா சிபிஐயிடம் கொடுத்திருந்த வாக்குமூலத்தில், மசூதியின் முதல் கோபுரம், 2வது மற்றும் மூன்றாவது கோபுரம் இடிந்து விழுந்தபோது ரிதம்பராவும், உமா பாரதியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, எஸ்.சி. தீக்ஷித் ஆகியோரையும் கட்டித் தழுவி மகிழ்ந்தனர். பின்னர் மசூதி முழுமையாக இடிந்து விழுந்தபோது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொண்டனர் என்று கூறியிருந்தார். 
இன்று அஞ்சு ரேபரேலி சிபிஐ கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தபோது ரிதம்பராவும், உமா பாரதியும் கரசேவகர்களைப் பார்த்து வேகமாக இடித்துத் தள்ளுங்கள் என்று கூறி ஆவேசமாக கூச்சலிட்டதாகவும் கூறினார். அவர்களின் பேச்சால் கரசேவர்கள் மேலும் தூண்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அஞ்சுவின் சாட்சியத்தின் மூலம், அத்வானி உள்ளிட்டோரை மீண்டும் விசாரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக