சனி, 20 மார்ச், 2010

இந்திய ராணுவ ரகசியங்கள் யு.எஸ்க்கு கடத்தல்! 5 பெட்டிகள் பிடிபட்டன

சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளின் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.இனி சுங்கத்துறையினரின் சோதனையின்றி எந்த பொருளையும் அனுப்ப முடியாது என்றும் சென்னை துறைமுகத்தில் பார்சல்கள் பிரிவில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சமீபத்தில் சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் மூலமாக ராணுவ ரகசியங்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் துறைமுகத்தில் பார்சல்கள் வைக்கப்படும் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 5 பார்சல்கள் அதிகாரிகளின் கண்ணில் பட்டது. இந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் நீலக்கலரில் இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய வரைபடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பார்சல்கள் அனைத்தையும் தனியாக எடுத்துச் சென்று பாதுகாத்து வருகிறார்கள்.

ராணுவ ரகசியங்கள் அடங்கிய இந்த பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதனை அனுப்பியது யார் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் இந்த பார்சல்களை முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரின் குடும்பத்தினர் அனுப்பி வத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்திய ராணுவ ரகசியங்களை அமெரிக்காவுக்கு கடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரி ராஜன் கூறியதாவது:-சந்தேகத்துக்கிடமாக 5 பார்சல்களை பறிமுதல் செய்துள்ளோம். அதில் “ப்ளு பிரிண்ட்” ஒன்று உள்ளது. அது என்ன என்று இப்போது கூற முடியாது. இதனை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த பார்சல்களை இன்று மீண்டும் சோதனையிட உள்ளோம். அதன்பிறகுதான் இதுபற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும் என்று ராஜன் கூறினார்.
நன்றி : இந்நேரம் 

0 comments:

கருத்துரையிடுக