செவ்வாய், 9 மார்ச், 2010
நைஜீரியா இனக்கலவரம் 500 பேர் பலி.
ஆப்பிரிக்காவில் உள்ளது நைஜீரியா.இங்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பெருமளவு வசிக்கிறார்கள். இவர்கள் இடையே அடிக்கடி கலவரம் வெடிப்பது வழக்கம்.கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் இந்த 2 பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் 500 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நகர் அருகே உள்ள கிராமங்களில் இந்த மோதல் சம்பவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தன. ராட்சாட் மற்றும் ஜோட் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த ஒரு தரப்பினர்,வீடுகளுக்கு தீ வைத்தனர். அவர்கள் பெரோன் இனத்தை சேர்ந்தவர்களின் வீடுகளாக பார்த்து தான் தீ வைத்தனர். இந்த தாக்குதலை புலானி இனக்குழுவினர் நடத்தினார்கள். அவர்கள் 3 கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினார்கள்.
தாக்குதல் நடந்த போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்து விட்டனர் என்றும் ஒரு போலீஸ்காரரை கூட கலவரப்பகுதியில் காணவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். பலர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்த கலவரத்தில் 100 பேர் பலியானதாக தான் முதல் கட்டத்தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்த தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை இப்போது 500 ஆக உயர்ந்து உள்ளது. பலியானவர்களில் பெண்களும்,குழந்தைகளும் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.
தற்காலிக ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் கலவரத்தை ஒடுக்கும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்தில் 550 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக