செவ்வாய், 9 மார்ச், 2010

துருக்கியில் நிலநடுக்கம் - 57 பேர் பலி!

துருக்கியில் நேற்று(திங்கள்கிழமை) ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் 57 பேர் பரிதாபமாக பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள இலாசிக் என்ற இடத்தில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது "இதில் அங்குள்ள 6 கிராமங்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்தன. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" என அரசின் பேரிடர் உதவிமையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கம் அதிகாலை 4.32 மணி அளவில் ஏற்பட்டதால் பெரும்பாலானோர் என்ன நடந்தது எனத் தெரியாமல் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். அடுத்தடுத்து 30 முறை தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டன என இஸ்தான்புல்லிலுள்ள நில நடுக்க ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் கிராமங்களிலுள்ள வீடுகள் அனைத்தும் சேதமடைந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராமத்தின் நிர்வாக அதிகாரி கூறுகையில், "இங்கு ஒரு வீடு கூட மீதமின்றி அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதனால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகிறார்கள்" எனக் குறிப்பிட்டார். "இந்தக் கிராமங்களில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என இலாசிக் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக