சனி, 6 மார்ச், 2010

கற்பழிப்பு&ஓரினசேர்க்கை உள்பட நித்யானந்தா மீது 6 பிரிவுகளில் வழக்கு!

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ரகசிய கேமராவில் படம் பிடித்த ஆசிரம சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இன்று காலை ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில் நித்யானந்தா மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்ற சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரில் நடந்ததால், இந்த வழக்குகளை கர்நாடாகாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நித்யானந்தாவுக்கு எதிராக பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி பல பகுதிகளில் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நித்யானந்தா & ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளை ரகசிய கேமராவில் படம் பிடித்தது ஆசிரம சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்பது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (35). நித்யானந்தாவின் பிரசங்கத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது ஆசிரமத்தில் சேர்ந்தார். இவரது பெயரை ஸ்ரீநித்ய தர்மானந்தா என்று மாற்றியதும் நித்யானந்தாதான்.
நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீநித்ய தர்மானந்தா இன்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

பிபிஏ படித்துள்ளேன். 1996&ம் ஆண்டு சென்னை அடையாறில் பூச்சி மருந்து தெளிக்கும் வேலை செய்தேன். 2004&ம் ஆண்டு பரமஹம்ச நித்யானந்தரின் சொற்பொழிவுகளை கேட்டேன். ஆன்மீகத்திலும், அவர் மீதும் அளவுகடந்த பக்தி ஏற்பட்டது. 2006 ஆகஸ்டில் பெங்களூரில் நித்யானந்தா தியானபீடத்துக்கு சென்று தங்கினேன். லெனின் என்ற என் பெயரை ஸ்ரீ நித்ய தர்மானந்தா என்று நித்யானந்தர் மாற்றினார்.
ஆசிரமத்தில் புத்தகங்கள், சிடி மற்றும் வெளியிடும் பணியை கவனித்து வந்தேன். 18 முதல் 60 வயது வரையுள்ள 250 ஆண்களும், பெண்களும் ஆசிரமத்திலேயே தங்கி சீடர்களாக உள்ளனர். அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. ஆசிரமம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
நித்யானந்தரின் குடியிருப்பு ஒரு ஏக்கரில் உள்ளது. வருடத்தில் 6 மாதம் ஆசிரமத்தில் இருப்பார். மீதி காலம் உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்று வருவார். அவரது தியான வகுப்பு, சொற்பொழிவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கடந்த 4 ஆண்டுகளாக அவருடன் பல நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளேன்.
ஆசிரமத்துக்கு தினமும் 300 பக்தர்கள் வருவார்கள். ‘சீடர்கள் ஞானம் அடைவதற்கு பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களோடு பேசக்கூடாது. நான் கிருஷ்ணனின் அவதாரப் புருஷன். சிவன் மற்றும் பார்வதியின் அவதாரம்‘ என்று நித்யானந்தர் அடிக்கடி கூறுவார்.
ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு தியானப் பயிற்சி, ஞானம் பெறுவது தொடர்பாக சொற்பொழிவாற்றுவார். பல முக்கியப் பிரமுகர்கள் ஆசிரமத்துக்கு வருவார்கள். அங்கிருப்பவர்கள் யாரும் டி.வி. பார்க்கக் கூடாது. பேப்பர் படிக்கக்கூடாது. செல்போன்கூட பயன்படுத்தக் கூடாது.
தியானத்துக்கு வரும் ஆண், பெண் இருவரையும் நித்யானந்தர் கட்டிப் பிடித்து ஆசீர்வதிப்பார். ஆசிரமத்தில் 100 பெண்கள் சுவாமி நித்யானந்தருக்கு சீடர்களாக உள்ளனர். பெண் சீடர்களிடம் ‘நான் கிருஷ்ணனின் அவதாரம், நீங்கள் கோபியர்கள்‘ என்று கூறுவார். 7 மாதத்துக்கு முன்பு ஆசிரமத்துக்கு வந்த ஸ்ரீநித்ய விமலானந்தா என்பவர் நித்யானந்தருக்கு பணி செய்ய சென்றார். அப்போது தன்னிடம் சாமியார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக மனவேதனையுடன் தெரிவித்தார். அதனால் அவர் ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டார். அது முதல் நித்யானந்தரின் நடவடிக்கைகள் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவர் தங்குமிடம், ஓய்வறை, தியான மண்டபம் ஆகிய இடங்களில் பெண் சீடர்கள் மட்டும் பணி செய்வதால் அவர்களிடம் தவறாக நடப்பார் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு தனது செயலாளர் ஸ்ரீ நித்யானந்தா கோபிகா என்பவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார். இந்தத் தகவலும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தனக்கு விருப்பமான ஆண், பெண் சீடர்களை செயலாளர்கள் மூலம் தனது அறைக்கு வரவழைத்து பணி செய்ய சொல்வார். அப்போது அவர்களிடம், ‘நீ ஞானம் அடைந்து என் நிலையை அடைய வேண்டும் என்றால் எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்‘ என்று கூறி, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தெரியவந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள், ஆயிரக்கணக்கான சீடர்கள் தங்களது வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்து ஆன்மீகத்தில் திளைத்து, அவரது கருத்துக்களும் செயலும் தூய்மையானது என்றும், கடவுளின் அவதாரம் என்றும் நம்பி வழிபடுகின்றனர். அவர்கள் வஞ்சிக்கப்பட்டதையும், உடைமைகள் பறிபோனதையும் நினைத்து வேதனையடைந்தேன்.
அவரது உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டி, அவரால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட அனைவரையும் காப்பாற்ற வேண்டும். இந்து மதத்தின் பெயரால் காவி அணிந்து, நம்பி வந்த மக்களுக்கும் சீடர்களுக்கும் மதத்துக்கும் நம்பிக்கை துரோகம் செய்து, கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட அவரது செயலை ஆதாரத்துடன் சொல்ல முடிவெடுத்தேன்.
2009 டிசம்பரில் நித்யானந்தரின் செயலாளர் ஒருவர் மூலம் ரகசிய கேமராவை அவரது படுக்கையறையில் வைத்தோம். 2 நாட்கள் கழித்து ஒரு மெமரி கார்டை என்னிடம் கொடுத்து, நித்யானந்த சாமியின் லீலைகள் பதிவாகி இருப்பதாக கூறினார். அதைப் பார்த்தபோது ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இருந்தன.
நடிகை ரஞ்சிதா ஓராண்டாக ஆசிரமத்துக்கு வருவார். வரும்போது நித்யானந்தரின் பங்களாவுக்கு அருகில் உள்ள அறையில் தங்குவார். நித்யானந்தா கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது, அவருடன் ரஞ்சிதாவும் சென்றார். நடிகையுடன் நித்யானந்தர் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை வெளியுலகுக்கு தெரிவிக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
கடந்த பிப்ரவரி 18, 19 தேதிகளில் பகவத்கீதை சத்சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க நித்யானந்தாவுடன் கோவை சென்றேன். 19&ம் தேதி மதியம் கோவையில் இருந்து டெம்போ டிராவல்சில் சேலம் புறப்பட்டோம். என்னுடன் 15 சீடர்கள் இருந்தனர். நித்யானந்தரும் மற்ற சீடர்களும் 5 கார்களில் வந்தனர்.
அப்போது என்னிடம் சில சீடர்கள் சந்தேக பார்வையுடன் தேவையற்ற கேள்விகளை கேட்டனர். படமெடுத்ததை யாராவது சொல்லியிருப்பார்களோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு சேலம் சீரகப்பாடி என்ற இடத்துக்கு வந்தேன். புது ஆசிரம திறப்பு விழா நடந்தது. நித்யானந்தரின் கேரவன் வேனுக்கு என்னை அவரது செயலாளர் பிரணானந்தா அழைத்துப் போனார். ஆசிரமத்தில் ஏதாவது படம் எடுத்தாயா என்று கேட்டு மிரட்டினார்.
‘படம் எதுவும் எடுக்கவில்லை. என்னை வீணாக சந்தேகப்படாதீர்கள்‘ என்றேன். ‘உண்மையை சொல்லாவிட்டால் வேனுக்குள்ளேயே கழுத்தை நெரித்து கொலை செய்வோம்‘ என்று மிரட்டினர். பயந்துபோன நான், ‘உடைமைகளை வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள்‘ என்றேன்.
பின்னர் சீடர்களிடம் என்னை விட்டுவிட்டு நித்யானந்தர் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அப்போது பாத்ரூம் போவதாக கூறி அங்கிருந்து தப்பினேன். ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த 40 வயது ஆண் சீடர், 2008 டிசம்பரில் மாடியில் இருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி விசாரணை எதுவும் நடக்கவில்லை. நித்யானந்தரின் துன்புறுத்தலால் இளம் சன்னியாசினி ஒருவரும், 18 வயது சீடர் ஒருவரும் 2008&ல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 2009 டிசம்பரில் அழகன் என்ற சீடர் தூக்கு மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் அனைவரும் ஆசிரமத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஹெங்கேரி என்ற இடத்தில் உள்ள பி.ஜி.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆசிரமத்தில் உள்ளவர்களை நித்யானந்தர் தடியால் அடித்து காயப்படுத்தியுள்ளார். அவருக்கு பணபலம், ஆள்பலம், செல்வாக்கு இருப்பதால் வெளியில் சொன்னால் உயிருக்கு ஆபத்து என்று பயந்து யாரும் சொல்வதில்லை.
என் உயிருக்கு நித்யானந்தராலோ, அவரது ஆதரவாளர்களாலோ ஆபத்து ஏற்படும் என்பதால் சென்னை வந்து புகார் அளிக்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவுடன் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டையும் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:
லெனின் கொடுத்துள்ள புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 295&ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (ஓரினச் சேர்க்கை), 506(1) (கொலை மிரட்டல்), 120(பி) (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. லெனின் உயிருக்கு பயந்தே இங்கு வந்து புகார் அளித்திருக்கிறார்.
டிஜிபி மூலம் கர்நாடக மாநில போலீசாரிடம் பேசியுள்ளோம். வழக்கையும் அந்த மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே உள்ள மோசடி புகார் மீது நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். கர்நாடக போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். அவர்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்வோம். லெனின் கொடுத்த மெமரி கார்டில் நடிகை ரஞ்சிதா மட்டும்தான் நித்யானந்தாவுடன் இருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் அந்தக் காட்சிகள் உண்மையா? பொய்யா? என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. கர்நாடக போலீசார் இதுபற்றி விசாரிப்பார்கள். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

2 comments:

abdulrahman சொன்னது…

thanks for this news.allah save us

பெயரில்லா சொன்னது…

insha allah.
Don't Publish unwanted fellows News here. It spoils the genuine of this page

கருத்துரையிடுக