சனி, 20 மார்ச், 2010

பசுவதை தடை சட்டத்திற்கு மாற்றாக `கால்நடைகள் (மாட்டு இனங்கள்) வதைதடுப்பு மற்றும் பாதுகாப்பு' என்ற பெயரில் புதிய சட்டம் கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றம்

கர்நாடகத்தில் பசு உள்பட மாட்டு இனங்களை கொன்றால் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகத்தில் அமலில் இருந்த பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு திடீரென வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து `கால்நடைகள் (மாட்டு இனங்கள்) வதைதடுப்பு மற்றும் பாதுகாப்பு' என்ற பெயரில் புதிய மசோதாவை அரசு சட்டசபையில் அறிமுகம் செய்தது.

இந்த சட்ட மசோதாவில், பசுமாடு, கன்றுகள், எருது, எருமை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை கொல்லக்கூடாது.இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடாது. இதை மீறுபவர்களுக்கு குறைந்த பட்சம் 1 ஆண்டு முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். சிறைத் தண்டனை மற்றும் அபராதம் தனித் தனியாகவோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். 2வது தடவை குற்றம் செய்தால் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க் கட்சி காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பேசுகையில், இந்த சட்டம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என்றார். எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையிலும் இந்த சட்ட மசோதா குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஆளும் பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இந்த சட்ட மசோதா நிறைவேறியது.
பின்னர் வெளியே வந்த சித்தராமையா கூறுகையில், எந்த ஒரு மாநிலத்திலும் இதுபோன்ற கடுமையான சட்டம் இல்லை. மாட்டு இனங்களை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது கற்பழிப்பு குற்றத்துக்கு இணையான தண்டனை. இதை எதிர்த்து நாங்கள் கவர்னரிடம் முறையிடுவோம் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக