சனி, 10 ஏப்ரல், 2010
ஷார்ஜாவில் 3000 டைப்பிங் சென்டர்களை பூட்ட அரசு உத்தரவு: 12 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்
ஷார்ஜா எமிரேட்ஸின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் டைப்பிங் சென்டர்களுக்கான தனது இணையதள ஆன்லைன் தொடர்பை எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டித்துவிட்டதால் 3000 டைப்பிங் சென்டர்கள் இழுத்து மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 12 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்து அதற்கான கட்டணத்தை அரசு சார்பாக பெற்றுக் கொள்கின்றன டைப்பிங் சென்டர்கள். இவை கணினி ஆன் - லைன் தொடர்பில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
டைப்பிங் சென்டர்கள் பெரும்பாலும் தொழிலாளர் துறையின் பணிகளை செயலாற்றி வருகின்றன. குறிப்பாக லேபர் கார்டுக்கான மனு, லேபர் பெர்மிட் போன்றவை அடங்கும். இங்குள்ள பெரும்பாலான மையங்களில் இந்தியர்களே பெரும்பாலும் பணியாற்றுகின்றனர். இதுத்தொடர்பாக ஷார்ஜா தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஹுமைத் பின் டீமாஸ் தெரிவிக்கையில், "டைப்பிங் சென்டர்களை கட்டுப்படுத்த விரும்புகிறோம். ஒரு விரிவான அலுவலகம் இப்பணிகளை மேற்க்கொள்ளும்" என்றார்.
ஹுமைத் பின் டீமாஸை கல்ஃப் நியூஸ் இதழ் இதுத்தொடர்பாக தொடர்புக்கொள்ள முயற்சித்த பொழுது தொடர்புக்கொள்ள இயலவில்லை எனக்கூறுகிறது. அஜ்மானில் ஏற்கனவே பல டைப்பிங் சென்டர்கள் மூடப்பட்டுவிட்டன. அங்கு ஒரு நபர் ஒரு டைப்பிங் சென்டர் மட்டுமே நடத்தலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. அபுதாபியிலும் இதே உத்தரவு அமுலில் இருந்த பொழுதிலும், விண்ணப்பங்கள் தொடர்பான பணிகளை மேற்க்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா அரசின் உத்தரவால் 12 ஆயிரம் பேர் வேலையை இழக்க நேரிடும் என ஒரு டைப்பிங் சென்டரின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
0 comments:
கருத்துரையிடுக