சனி, 10 ஏப்ரல், 2010

மின்கட்டணம் விரைவில் உயருகிறது – பாதிக்காத வகையில் இருக்கும் என கருணாநிதி தகவல்


தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இருப்பினும் இந்த மின் கட்டணம் மக்களைப் பாதிக்காத அளவில் இருக்கும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக மின்வாரியம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்போர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த கருத்தக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரியத் தலைவர் சி.பி.சிங் பேசுகையில், தமிழ்நாட்டில் மின் தேவைக்கும், வினியோகத்துக்கும் உள்ள இடைவெளி 30 சதவீதமாக உள்ளது. எனவே மாநிலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்காக கடந்த 2 ஆண்டுகளில் மின் வாரியம் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் ரூ. 8 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 10 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யும் திட்டம் உள்ளது.
தமிழ்நாட்டில் தனி நபரின் மின் நுகர்வு ஆண்டுக்கு 1100 யூனிட்டாக உள்ளது. எனவே தனி நபர் நுகர்விலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. வீடுகளில் மாதத்துக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு இருக்காது. இதே போல் சிறுதொழில் நிறுவனங்களில் ஒரு மாதத்துக்கு 750 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டண உயர்வு இருக்காது.
மின் கட்டண உயர்வு என்பது வீடுகளில் 100 யூனிட்டை தாண்டும்போது அதிகபட்சமாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 1 என்ற அளவில் உயர்வு இருக்கும். தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க தமிழக அரசு தயாராக இருந்தாலும் போதிய மின்சாரம் கிடைப்பது இல்லை. எனவே இப்போதுள்ள மின்வெட்டு மேலும் சில காலங்களுக்கு நீடிப்பதை தடுக்க முடியாது.
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்பட தொடங்கினால் ஓரளவு மின் பற்றாக்குறை நீங்கும் என்றார்.
சட்டசபையில் மின் கட்டண உயர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே மின்கட்டணத்தி்ல் சிறிது மாற்றம் இருக்கும். சாதாரண மக்களின் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றார்.

0 comments:

கருத்துரையிடுக