சனி, 15 மே, 2010

உடல் கோளாறுகளுக்கும் ஊனத்திற்கும் மரபணு மாற்ற உணவே காரணம்: ஹிமாச்சல் முதல்வர்.


மரபணு மாற்ற விதைகளைக் கொண்டு நமது நாட்டை அழிவிப் பாதைக்குக் கொண்டுச் செல்ல பன்னாட்டு நிறுவனங்கள் சில திட்டமிட்டுச் செயலாற்றுகின்றன என்று ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் பி.கே.துமால் கூறியுள்ளார்.
தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற அரசு அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் துமால், “நமது மக்களுக்கு ஏற்பட்டுவரும் ஊனத்திற்கும், உடல் கோளாறுகளுக்கும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளே காரணம். மரபணு மாற்ற விதைகளை உற்பத்தி செய்வதில் இங்கேயுள்ள சில நிறுவனங்களுக்கும், மரபணு மாற்ற விதைகளை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு உள்ளது. இது மிகவும் கவலைக்குறியது. நமது நாட்டிற்குள் இவர்களின் ஊடுறுவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது என்று சில ஊடகங்கள் திட்டமிட்டே செய்தி பரப்பி வருகின்றன என்று குற்றம் சாற்றிய முதலமைச்சர், சில நிறுவனங்கள் விற்றுவரும் மருந்துகளே இப்படிப்பட்ட காய்ச்சல் உருவாவதற்கு காரணமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மரபணு மாற்ற விதைகளை அறிமுகம் செய்வதன் மூலம் நமது நாட்டின் விவசாயத்தை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என்று கூறிய துமால், அதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்த முயன்று வருகின்றன என்று கூறியுள்ளார்.  

0 comments:

கருத்துரையிடுக