செவ்வாய், 1 ஜூன், 2010

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு-சமச்சீர் கல்வி அமல்.


கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டன.
இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும் அறிமுகமாகிறது. சமச்சீர் பாடத் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், 1.16 கோடி புத்தகங்களை அச்சிட்டுள்ளது.
வகுப்புகள் தொடங்கும் முதல் நாளிலேயே ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளில் சில நாளையும் (புதன்கிழமை), பெரும்பாலான பள்ளிகள் இந்த வாரத்திலும் திறக்கப்படுகின்றன.
அரசு கட்டணம்தான் வசூலிக்க வேண்டும்:
இந் நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தொடக்கப் பள்ளிகள் ரூ. 3,500ம், நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5,000ம், உயர்நிலைப் பள்ளிகள் ரூ. 8,000ம், மேல்நிலைப் பள்ளிகள் ரூ. 11,000ம் கட்டணம் வசூலிக்கலாம் வரையறை செய்தது. ஆனால் இந்தக் கட்டண நிர்ணயத்துக்கு அனைத்து தனியார் பள்ளிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 
கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 5,450 பள்ளிகள் அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளன. இது குறித்து தணிக்கையாளர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வறிக்கை வரும் வரை அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் அனைத்து தனியார் பள்ளிகளும் வசூலிக்க வேண்டும். மறுபரிசீலனைக்கு பிறகு நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி கோவிந்தராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10,951 தனியார் பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக