செவ்வாய், 29 ஜூன், 2010
மீண்டும் பரவும் பன்றிக் காய்ச்சல்!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேருக்கும், சென்னையில், 3 பேருக்கும்
பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைச்
சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் மகன், ஆவடியைச் சேர்ந்த ஒரு முதியவர், மேலும் ஒரு
முதியவர் என மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய
வந்தது. இதையடுத்து இவர்களுடைய சளி சாம்பிள் கிங் மருத்துவ ஆராய்ச்சி
நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி
செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தனி
வார்டு ஒதுக்கப்பட்டு அங்கு வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ்
கூறுகையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, சென்னையில் பன்றிக் காய்ச்சல்
பரவியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கேரளாவிலும், ஆந்திராவிலும் பன்றிக்
காய்ச்சல் தாக்குதல் அதிகம் இருப்பதால் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம்
இருக்கக் கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது. கன்னியாகுமரி அரசு
மருத்துவமனையில், அந்தமாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையிலும் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. மேலும் ஒவ்வொரு அரசுமருத்துவமனையிலும் தனி வார்டு அமைத்து
பாதிப்புக்குள்ளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை. நோய்த் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே
கண்டறிந்து விட்டால் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தி விட முடியும். கடைசி
கட்டத்தில் வந்தால்தான் சிரமம். அப்படிப்பட்ட நிலையில் வருபவர்களை காப்பாற்ற
முடியாது.
கடந்த ஆண்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணம் கடைசி
கட்டத்தில் சிகிச்சைக்காக வந்ததுதான். இந்த நோய்ப் பரவல் குறித்து
விவாதித்து ஆலோசிக்க சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூட்டம்
ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரி
மாவட்டத்திற்கு ஒருசிறப்புக் குழு செல்லவுள்ளது. போதிய அளவில் மருந்துகள்
இருப்பதால் நோய்ப் பரவலைத் தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது என்றார்

0 comments:
கருத்துரையிடுக