செவ்வாய், 29 ஜூன், 2010

குமரியில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க பள்ளிகளில் மாணவர்களிடம் ரத்த பரிசோதனை நடத்த முடிவு.

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களுக்கு சென்று வந்த மாணவ, மாணவிகளிடம் ரத்த பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.இந்தியாவில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் உயிர் இழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக கேரளாவில் 266 பேருக்கும், மராட்டியத்தில் 36 பேருக்கும், கர்நாடகத்தில் 18 பேருக்கும், ஆந்திராவில் 8 பேர் உள்பட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 345 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் பலியாகி உள்ளனர். ஜூன் 8 முதல் ஜூன் 14 வரை நடந்த கணக்கெடுப்பில் 168 பேர் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் இறந்துள்ளனர்.

கடந்த இரு வாரத்தில் மட்டும் 31 பேர் வரை இறந்திருக்கிறார்கள். இதையடுத்து பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் அதையொட்டி உள்ள மாநிலங்களில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட கேரளாவையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் எல்லை பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 100 க்கும் மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர். இந்த முறையும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் வேகமாக ஈடுபட்டுள்ளன. தற்போது மேற்கு கடலோர பகுதிகளில் மீன் பிடி தடைகாலம் அமுலில் இருப்பதால், கேரளாவில் மீன் பிடி பணியில் இருந்த குமரி மீனவர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பி உள்ளனர்.
அப்படி திரும்பிய 3 ஆயிரம் மீனவர்களிடம் ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ந்தேதி (வெள்ளி) முதல் நல உதவி மையங்கள் தொடங்கப்பட்டன. களியக்காவிளை, தக்கலை, நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், நாகர்கோவில் ரயில்வே மருந்தகம், கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 2 ஷிப்ட் முறையில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் இந்த நல உதவி மையங்களில் காய்ச்சல், தொண்டை வலி, தொடர்ந்து இருமல் ஆகிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் இருந்து 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இவர்களில் முதற்கட்டமாக சிறுமி மற்றும் ஒரு குழந்தைக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 3 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை மேற்கொள்வது பற்றி ஆராய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.
குமரி மாவட்டம் கேரளாவையொட்டி இருப்பதால் இங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே தற்போது பள்ளிகள் திறந்து உள்ளதால் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வந்த மாணவ, மாணவிகளிடம் ரத்த பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதிகமான காய்ச்சல், இருமல், சளி, கண் எரிச்சல் போன்ற அறிகுறியோடு இருக்கும் மாணவ, மாணவிகள் பற்றி உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களுக்கு இலவசமாக ரத்த பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. நகர பகுதியில் நகர் நல அலுவலர் உத்தரவின் பேரில் பணியாளர்கள் கொசு ஒழிப்பு, பிளிச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக