வெள்ளி, 4 ஜூன், 2010

குழந்தைகளை வைத்து கழிவறைகளை கழுவிய கொடுமை.


சுசீந்திரம் காப்பகத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்று குழந்தைகள் நல அதிகாரி அளித்த புகாரின் பேரில் காப்பக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நல்லூர் தெற்கு தெருவில் அனுமதியில்லாமல் நடத்தப்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்த 17 குழந்தைகளை மீட்டு, நெல்லையில் உள்ள சரணாலயத்துக்கு அனுப்பி வைத்தனர். காப்பகத்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். சில குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள். நல்ல நிலையில் படிக்க வைக்கிறோம் என்று கூறி குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து இருக்கிறார்கள். குழந்தைகள் மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவர்களின் உறவினர்கள் நேற்று நெல்லை சரணாலயத்தில் குவிந்தனர்.
காப்பகத்தை சோதனை நடத்தியபோது அடிப்படை வசதியின்றி இருந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட குழந்தைகளிடம் குழந்தைகள் நலக்குழு தலைவர் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் அடிப்படையில் காப்பகம் நடத்தி வந்த போதகர் டைட்டஸ் துரைசிங் மீது குழந்தைகள் நலக்குழு தலைவர் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
சுசீந்திரம் நல்லூரில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தில் சரியான உணவு வழங்கப்பட வில்லை என்று குழந்தைகள் கூறுகிறார்கள். அடிப்படை வசதியின்றி காப்பகம் இருந்துள்ளது. கழிவறைகளை கூட குழந்தைகளை வைத்தே சுத்தம் செய்திருக்கிறார்கள். காப்பகம் தொடர்பான விவரங்களை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று குழந்தைகளை கண்டித்தும் இருக்கிறார்கள். விதிமுறை மீறி இல்லம் நடத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த புகாரின்பேரில் தற்போது பல்வேறு பிரிவுகளில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதகர் டைட்டஸ் துரைசிங்கை தேடி வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையில் தனிப்படை இதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே போதகர் குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் போலீசார் நடவடிக்கை தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. குழந்தைகள் விஷயத்தில் எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் போதகருக்கு ஆதரவு தெரிவிப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி உள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக