ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம்

கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் உணவுக்கும் இருப்பிடத்துக்கும் அலைந்து கொண்டிருந்த வேளையில் தனது ஆடம்பர ஐரோப்பியப் பயணத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்ததால் நெருக்கடி நேரத்தில் நாட்டில் இல்லாமல் ஊர் சுற்றிய முக்கியஸ்தர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பெயர் முதலிடம் பெற்றுள்ளது. வாஷிங்டனிலிருந்து வெளியாகும் 'அயலுறவுக்கொள்கை' (Foreign Policy) என்ற இதழ் கடமை தவறிய மோசக்காரத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதியுறும் தருணத்தில் சர்தாரி ஐரோப்பிய பயணங்களில் ஆடம்பர விடுதிகளில் தங்கி உல்லாசமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
அமெரிக்க அதிகாரிகள் சர்தாரியிடம் நட்பு முறையில் இந்த ஆடம்பர பயணத்தை ரத்து செய்து நாடு திரும்புமாறு கோரியும் அவர் அதற்கு இசையவில்லை. ஒரு நாள் இரவு அவர் தங்கும் விடுதியில் அவர் செலவு செய்யும் தொகை 11,000 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனிற்கு சர்தாரி வந்தபோது பொதுமக்களிடம் உரையாற்றுகையில் 60 வயது பிரிட்டிஷ்-பாகிஸ்தான் முதியவர் ஒருவர் சர்தாரி மீது செருப்பு வீசினார். "என்னிடம் அப்போதிருந்த ஒரே எதிர்ப்பு ஆயுதம் செருப்புதான்" என்று கைது செய்யப்பட்ட பிறகு அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
 இந்தப்பட்டியலில் இடம்பெற்ற மற்றொரு பிரபலஸ்தர் மெக்சிகோ வளைகுடாவின் மிக மோசமான, வரலாறு காணாத கச்சா எண்ணைக் கசிவுக்குச் சொந்தமான பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டோனி ஹேவர்ட் ஆவார். எண்ணை பீறிட்டு மெக்சிகோ வளைகுடா கடல் நீரை பலமைல்களுக்கு நாறடித்த போது இந்தக் கனவான் வைட் தீவில் உல்லாசப் படகில் மகிழ்ச்சியோடு உலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக