திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழகத்தில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்-தடுப்பூசி போட குவியும் மக்கள்

தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருவரும், கோவையில் ஒருவரும் உள்பட இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தடுப்பூசி நடவடிக்கை களை அரசு விரைவுபடுத்தியுள்ளது. மேலும் ஆய்வகங்களுக்கும் அது ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் வரை 7 பேர், பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்து போனார்கள். அதன்பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த மோகனவேலு, பன்றிக்காய்ச்சல் நோயினால் உயிரிழந்தார். பின்னர், நெல்லையை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். 

தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனால், பன்றிக்காய்ச்சல் பற்றிய பயம் மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்கூட்டியே கண்டறிந்து, ஒரே ஒரு ஊசி போட்டுக் கொண்டால் எளிதில், சரியாகிவிடக் கூடியது இது. எனவே, இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், 
பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பன்றிக்காய்ச்சலுக்கு அரசு தரப்பில் தடுப்பூசி போடுவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை திங்கட்கிழமை முதல் போடப்படும். இந்த தடுப்பூசியை யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருப்போர், சர்க்கரை வியாதியால் அவதிப்படுவோர் போன்ற நோய்த்தடுப்பு சக்தி குறைந்தவர்கள், போட்டுக் கொள்வது உகந்தது. சென்னைக்குப் பிறகு மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. பொதுவாகவே, சிறிய வயதினருக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். தனியார் மருத்துவமனை களில், அரசு அங்கீகரித்துள்ள 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் நல்ல மருத்துவ வசதிகள் இருப்பதால், வெளி மாநிலத்தில் இருந்தெல்லாம் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதனால் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. 
இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 50 ஆயிரம் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுபோல், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட அந்த நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளோம். பன்றிக்காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஸ்டேன்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களையும், மற்ற மாவட்டங்களில் அரசு தலைமை மருத்துவமனைகளையும் பொதுமக்கள் அணுகினால் ஏற்பாடு செய்யப்படும் என்றார். 
 தடுப்பூசிக்கு ரூ. 200: 
தடுப்பூசி குறித்து கிங் நிறுவன இணை இயக்குநர் குணசேகரன் கூறுகையில், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை 2 வகையாக மேற்கொள்ளப்படும். ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு தடுப்பூசியும் (வாக்சிபுளூ-எஸ்), மற்றவர்களுக்கு மூக்குவழியாக சொட்டு மருந்தும் (நேசோவேக்) போடப்படும். தடுப்பூசிக்கு ரூ.200-ம், சொட்டு மருந்துக்கு ரூ.150-ம் வசூலிக்கப்படும். தடுப்பூசி போட ஏராளமானோர் வருவார்கள் என்று கருதுவதால், முன்கூட்டியே பதிவு செய்யும் இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பேசி வருகிறோம். இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
15 ஆய்வகங்களில் சோதனை செய்ய ஏற்பாடு: 
இதேபோல, தமிழ்நாட்டில் 7 அரசு ஆய்வகங்கள் உள்பட மொத்தம் 15 இடங்களில் பன்றிக்காய்ச்சல் உள்ளதா என்பது பற்றிய பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 
தமிழ்நாட்டில் மழை பெய்துவருகிறது. அதன்காரணமாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பன்றிக்காய்ச்சல், டெங்குகாய்ச்சல் போன்ற நோய்களும் சில இடங்களில் பரவி வருகின்றன. காய்ச்சல், தலைவலி,தொண்டைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது பன்றிக்காய்ச்சலின் அறிகுறியாகும். எனவே அத்தகைய அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடனடியாக சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். பன்றி காய்ச்சல் உள்ளதா என்று அறிய அரசு ஆய்வகங்கள் 7 இடங்களில் உள்ளன. அதன் விவரம்: 
1.கிங் ஆய்வு நிலையம், கிண்டி, சென்னை 
2.வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி 
3.சென்னை மருத்துவக்கல்லூரி 
4.கோவை மருத்துவக்கல்லூரி 
5.திருச்சி மருத்துவக்கல்லூரி 
6.நெல்லை மருத்துவக்கல்லூரி
7. மதுரை மருத்துவக்கல்லூரி. 

தனியார் ஆய்வு நிலையங்கள்: 
1.விவேக் லேப், நாகர்கோவில்
2.லிஸ்டர் மெட்ரோ பாலிஸ், சென்னை, 
3. பாரத் ஸ்கேன்ஸ் சென்டர் சென்னை, 
4.ஐடெக் டயகோனஸ்டிக் சென்டர், திருச்சி, 
5.டாக்டர் ரத் லேப் திருச்சி, 
6.மைக்ரோ பயாலாஜிக்கல் லேப், கோவை. 
7.இம்முனோ ஆக்ஸிலரி லேப், கோவை. 
8.போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி.  
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இந்த நோய் தாக்கம் கண்டநோயாளிகளிடம் இருந்து பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. வாக்சிபுளு மற்றும் நாசோவாக் என்ற தடுப்பு மருந்துகளும் பொது சந்தையில் விற்பனைக்காக உள்ளன. பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம். பொதுமக்களின் நலன்கருதி கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் குறைந்தவிலையில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுத்தமான நீரால் சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தும்மும்போதும் இருமும்போதும் கை மற்றும் துணிகளை வைத்து மூடும் சுகாதார பழக்கத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
ட்ஸ்தமிழ் 

0 comments:

கருத்துரையிடுக