சனி, 20 நவம்பர், 2010

60 ஆண்டுகளில் வெளிநாடுகளில் குவிந்த இந்திய கறுப்பு பணம் ரூ.20 லட்சம் கோடி.


கடந்த 60 ஆண்டுகளில் (1948 முதல் 2008 வரை) இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் குவிக்கப்பட்ட கறுப்பு பணத்தின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் கோடி என அமெரிக்க நிதி ஆலோசனை நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. வாஷிங்டனை சேர்ந்த நிறுவனம், குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி (ஜிஎப்ஐ). அது ‘இந்தியாவில் இருந்து 1948 முதல் 2008 வரை சட்டவிரோத பண புழக்கம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டு முதல் வருமானத்தை மறைத்து கறுப்பு பணமாக வெளிநாடுகளில் பதுக்குவது தொடங்கி விட்டது. வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு, கிரிமினல் குற்றங்கள் மூலம் ஏராளமான பணம், வெளிநாடுகளில் குவிக்கப்பட்டு வந்துள்ளது. 2008ம் ஆண்டு வரை அப்படி வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் கோடி (462 பில்லியன் டாலர்). இது இந்தியாவின் வெளிநாட்டு கடனான ரூ.10.35 லட்சம் கோடியை விட சுமார் இரண்டு மடங்கு.

குறிப்பாக, 1991ம் ஆண்டு முதல் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக வளர்ச்சி வேகம் அதிகரித்ததில் இருந்து ஒரு பிரிவினரின் வருமானம் அளவுக்கு அதிகமாக இருப்பதும், மறுபுறம் வறுமையுமாக சமச்சீரற்ற நிதி பகிர்மானம் தொடங்கியது. அதன்மூலம், வருமானத்தை மறைக்கும் வகையில் கணக்கில் காட்டாத கறுப்பு பணத்தை இந்தியாவில் இருந்து வெளியேற்றி வெளிநாடுகளில் அதிகளவில் பதுக்கப்பட்டு வந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி ஜிஎப்ஐ இயக்குனர் ரேமண்ட் பேக்கர் கூறுகையில், “அரசு துறைகளில் ஊழல், அதிகாரிகள் பெறும் லஞ்சம், வருமான வரி ஏய்ப்பு மற்றும் சில நிதி முறைகேடுகளில் கிடைக்கும் கறுப்பு பணம், இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு பாதுகாக்கப்படுகிறது” என்றார். ஜிஎப்ஐ யின் மற்றொரு பொருளாதார நிபுணர்தேவ் கெர் கூறுகையில், “ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம். சமீப ஆண்டுகளில் கறுப்பு பணத்தின் வளர்ச்சி 11.5 சதவீதமாக உயர்ந்தது” என்றார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதன் மூலம், நாட்டின் கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றலாம் என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

கருத்துரையிடுக