நன்றி: தினகரன்
வெள்ளி, 19 நவம்பர், 2010
7 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் : நாகர்கோவில் வீதிகளில் நகரக்கூட இடம் இல்லை
நாகர்கோவில் நகரில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை இதுவரை இல்லாத அளவுக்கு வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் ரூ.1 கோடியே 29 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கிருந்த பஸ்கள் வடசேரி பஸ் நிலையத்துக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. அதன் படி தற்போது வேப்பமூட்டில் இருந்து அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்று வந்த பஸ்கள் அனைத்தும் தற்போது மணிமேடை சந்திப்பு, பாலமோர் ரோடு, அண்ணா ஸ்டேடியம் வழியாக வடசேரி பஸ் நிலையம் வருகின்றன. பின்னர் அண்ணா ஸ்டேடியம் ரோடு, பால மோர் ரோடு, மணிமேடை சந்திப்பு, எஸ்.பி. அலுவலக ரோடு, கட்டபொம்மன் சந்திப்பு, மீனாட்சிபுரம் வழியாக கோட்டார் செல்கின்றன.
இந்த மாற்று பாதையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரின் மைய பகுதியான பாலமோர் ரோடு இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் நெரிசல் அதிகரித்துள்ளது. இதே போல் எஸ்.பி அலுவலக ரோடு, கட்டபொம்மன் சந்திப்பு சாலைகள் பஸ் போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் நாகர்கோவில் நகரில் நேற்று மதியம் 2 மணியில் இருந்து இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்தது. பாலமோர் ரோடு, ஒழுகினசேரி சாலை, அவ்வை சண்முகம் சாலை, சேவியர் ஜங்ஷன், செட்டிக்குளம் சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றன. வெளியூரில் இருந்து வந்த வாகனம் நகருக்குள் வர முடியாமல் ஆங்காகே திணறி கொண்டிருந்தன. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
குறிப்பாக மாலை 4 மணிக்கு தொடங்கிய நெருக்கடி இரவு வரை நீடித்தது. ஒரு சில போலீசாரே ஆங்காங்கே நின்று கொண்டு நெருக்கடியை சரி முயற்சித்த னர். வாகனங்கள் நேருக்கு நேர் முட்டி கொண்டு இருந்ததால் நகர முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் பஸ்கள் நடுரோட்டில் பலமணி நேரம் ஒரே இடத்தில் நின்றன. நாகர்கோவில் நகரின் அனைத்து வீதிகளிலும் இதே நிலை நீடித்தது. நெல்லை வழியாக வரும் பஸ்கள், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் பஸ்களும் பல மணி நேரம் அப்படியே நடுரோட்டில் நிறுத்தப்பட்டன.
பஸ்சில் இருந்த அனைவரும் தவித்துப்போனார்கள். பலர் இறங்கி பல கிமீ தூரம் நடந்து தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு சென்றனர். போக்குவரத்து போலீசார் ஒருவர் இது குறித்து கூறுகையில், மாலை 4 மணியில் இருந்து 11 மணி வரை படாதபாடுபட்டு நெருக்கடி தீர்க்கப்பட்டதாக கூறினார். நெருக்கடி காரணமாக மாலையில் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள், அலுவலகங்கள் முடிந்து செல்ல வேண்டியவர்கள் பல மணி நேரம் தாமதமாகவே சென்றனர்.
நன்றி: தினகரன்
நன்றி: தினகரன்
0 comments:
கருத்துரையிடுக