திங்கள், 13 டிசம்பர், 2010

கர்கரேயை துரோகி என்று அத்வானி, ராஜ்நாத் சிங் கூறியது ஏன்-திக்விஜய் சிங் கேள்வி.

கர்கரே ஒரு துரோகி என்று பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கூறியது ஏன். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரக்யா தாக்கூர், தயானந்த பாண்டே ஆகியோருக்கு ஆதரவாக பிரதமரிடம் மனு கொடுத்தது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் கேட்டுள்ளார். கர்கரேவைக் கொன்றது இந்து அமைப்புகள்தான் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் திக்விஜய் சிங். இதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. திக்விஜய் சிங்கின் பேச்சு பாகிஸ்தானுக்குத்தான் உதவியாக இருக்கும், வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார் திக்விஜய் சிங் என்று கர்கரேவின் மனைவியும் கடுமையாக சாடியிருந்தார். இதையடுத்து தனது பேச்சை மறுத்து விட்டார் திக்விஜய் சிங். நான் இந்து அமைப்புகளைக் குறை கூறவில்லை என்று கூறி விட்டார்.
இந்த நிலையில் தற்போது அத்வானி உள்ளிட்டோர் மீது அவர் பாய்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அத்வானி, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ஹேமந்த் கர்கரே ஒரு துரோகி என்று கூறியது ஏன்? மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரக்யா தாக்கூர், தயானந்த பாண்டே ஆகியோருக்கு ஆதரவாக பிரதமரைப் பார்த்தது ஏன் என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். ஆனால் திக்விஜய் சிங்கின் இந்தக் கூற்றை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து மூத்த தலைவர் சந்தன் மித்ரா கூறுகையில், அத்வானியும், ராஜ்நாத் சிங்கும் ஒருபோதும் கர்கரேவை துரோகி என்று கூறவில்லை. திக்விஜய் சிங்கின் ஞாபக சக்திக்கு என்னவாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் கர்கரே தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறினார். பின்னர் நான்தான் கர்கரேவுடன் பேசியதாக கூறினார். 
அந்துலேவும் முதலில் இப்படித்தான் பேசினார். ஆனால் இவர்களது சுயரூபத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி விட்டது என்றார். திக்விஜய் சிங்கின் இந்த தொடர் பேச்சுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கூறி விட்டது நினைவிருக்கலாம்.

0 comments:

கருத்துரையிடுக