சனி, 18 டிசம்பர், 2010
இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து-ராகுல் காந்தி
பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் இவ்வாறு அவர் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் தான் இந்து தீவிரவாதத்தை மட்டும் குறிப்பிடாமல் அனைத்து வகையான தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஆபத்தானதே என்று கூறியதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு டிமோதி ரோமரை சந்தித்தபோது ராகுல் இந்து தீவிரவாதம் குறித்துக் கூறியதாக ரோமர், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார். அதைத்தான் தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி என்னைச் சந்தித்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்திய முஸ்லீ்ம்களில் சிலர் ஆதரவாக உள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. இருந்தாலும், இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாதம், இந்து தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி அபாயகரமானதாக இருக்கிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், முஸ்லீம் தீவிரவாதத்தை விட இந்து தீவிரவாதம்தான் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன். முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலில் ஈடுபடுவது, பதட்டத்தை ஏற்படுத்துவது என்று இந்து தீவிரவாத அமைப்புகள் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவுக்குள்ளேயே வளர்ந்து வரும், அதிகரித்து வரும் இந்த தீவிரவாத செயல்கள், பாகிஸ்தானிலிருந்து வரும் தாக்குதல்கள், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை விட இந்தியாவுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்த வல்லவை என்று நான் கருதுகிறேன். எனவே இதுகுறித்து கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது என்று என்னிடம் ராகுல் தெரிவித்தார் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு விக்கிலீக்ஸ் செய்தியில், மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவை அதிகரித்து மதவாத அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க தூதர் அனுப்பிய செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி இந்து தீவிரவாதம் குறித்து ரோமரிடம் பேசிய தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக