சனி, 25 டிசம்பர், 2010

"அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் என்னை கொன்று விடுவார்கள்'' `விக்கி லீக்ஸ்' நிறுவனர் அசாங்கே அச்சம்.

ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக, என்னை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் என்னை ஜெயிலில் வைத்து கொன்று விடுவார்கள் என்று `விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் அசாங்கே அச்சம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜுலியன் அசாங்கே, `விக்கி லீக்ஸ்' இணையதளத்தை நடத்தி வருகிறார். அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானிங் மூலமாக பெறப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2 லட்சத்து 50 ஆயிரம் ரகசிய ஆவணங்களை கடந்த நவம்பர் மாதம் தனது இணையதளத்தில் அசாங்கே வெளியிட்டார். அதனால் உலக அளவில் அமெரிக்காவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உளவு குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்ய அமெரிக்க அரசு முயன்று வருகிறது.

இந்தநிலையில், சுவீடன் நாட்டில் சுமத்தப்பட்ட செக்ஸ் குற்றச்சாட்டுகளின்கீழ், லண்டனில் அசாங்கே கைது செய்யப்பட்டார். அவர் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இங்கிலாந்தில் தன் நண்பர் வீட்டில் தங்கியிருந்தபடி, தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
அவரை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்குமாறு சுவீடன் அரசு தொடர்ந்த வழக்கு, லண்டன் கோர்ட்டில் பிப்ரவரி 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதே சமயத்தில், உளவு குற்றச்சாட்டுகளுக்காக, அசாங்கேவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசிடம் அமெரிக்க அரசு கேட்டு வருகிறது.

இந்நிலையில், அசாங்கே ஒரு பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
என்னை இங்கிலாந்தை விட்டு வெளியேற்றுவது அரசியல்ரீதியாக சாத்தியமற்றது. அமெரிக்காவுடன் ஒத்துழைக்காமல் இருப்பதையே இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரும்புகிறார். அரசியல் கைதிகளை நாடு கடத்தாமல் இருக்க இங்கிலாந்து அரசுக்கு சட்டரீதியாக உரிமை உண்டு. ஆனால், உளவு குற்றச்சாட்டு, வேறுமாதிரியானது. எனவே, இந்த விஷயத்தில் முடிவு எடுப்பது இங்கிலாந்து அரசின் தனிப்பட்ட உரிமை. ஒருவேளை என்னை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தி ஒப்படைத்தால், அமெரிக்க ஜெயிலில் என்னை கொன்று விடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

0 comments:

கருத்துரையிடுக