புதன், 29 டிசம்பர், 2010
துபாயில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி
சென்னை, டிச. 29: பாரிமுனையில் கேலிபர் இன்டர்நேஷனல் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில், திநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் துபாய் நாட்டுக்கு எலக்ட்ரீஷியன், மெக்கானிக் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தை உரிமம் பெறாமல் நடத்தி வந்துள்ளனர். இது பற்றி அசோக்நகரில் உள்ள வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் பாதுகாப்பு பிரிவுத்துறை அதிகாரி ஜெயசங்கர் விசாரணை நடத்தினார். பின் இது பற்றி மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதரிடம் ஜெய்சங்கர் புகார் செய்தார். கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
நேற்று மாலை, நட்சத்திர ஓட்டலில் இந்நிறுவனத்தார் ஆட்களை தேர்வு செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனால் தனிப்படை போலீசார் விரைந்து சென்று தேர்வு நடத்திய டிராவல்ஸ் உரிமையாளர்கள் பாரிமுனையைச் சேர்ந்த முகமது நூருதீன் (33), அசோக் (58), மும்பையைச் சேர்ந்த ஸ்டேனி பர்போசா (48) ஆகியோரை கைது செய்தனர். நேற்று 150 பேர் தேர்வுக்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரிடமும் பல லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். சிலரிடம் பணத்தையும் வசூலித்திருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்ப முடியும். இதனால் அனுமதி பெறாத நிறுவனங்களிடம் பணத்தைக் கட்டி ஏமாற வேண்டாம்’’ என்றார்.
0 comments:
கருத்துரையிடுக