திங்கள், 27 டிசம்பர், 2010
எண்ணை மாற்றாமல் நிறுவனம் மாறும் வசதி செல்போன் நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் பேச்சுவார்த்தை.
சென்னை தொலைபேசி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: டிசம்பர் 25ம் தேதியில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நுகர்வோருக்காக ‘ப்ராஜக்ட் ஸ்மைல்’ என்ற முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய நோக்கமே வாடிக்கையாளர்களுக்கு துரித சேவை அளிப்பதுதான். சென்னை தொலைபேசிக்கு உட்பட்ட 40 இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. அடையாறு, பூக்கடை, கெல்லிஸ், கே.கே.நகர், சிஎஸ்சி(கஸ்டமர் சர்வீஸ் சென்டர்) மேற்கு, சிஎஸ்சி சென்ட்ரல், சிஎஸ்சி தென்மேற்கு, சிஎஸ்சி தென் கிழக்கு, ஆர்.கே.நகர், சிஎஸ்சி வடக்கு ஆகிய 10 இடங்களில் உள்ள மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும்; ஆவடி, செங்கல்பட்டு, குரோம்பேட்டை, அண்ணா ரோடு, காஞ்சிபுரம், சிஎஸ்சி வடகிழக்கு, அம்பத்தூர், மாதாவரம், நங்கநல்லூர், சிஎஸ்சி வடமேற்கு, சேலையூர், செயின்ட் தாமஸ் மவுன்ட், திருத்தணி, எண்ணூர் ஆகிய 10 இடங்களில் உள்ள மையங்கள் காலை 8 முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படும் வகையில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
15 மையங்கள் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரையிலும் செயல்படும். போன் கட்டணங்களை இமெயில், செக் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தொலைபேசியில் ‘3ஜி சர்வீஸ்’ தொடங்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இதுவரை 95 ஆயிரம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். 2ஜி சர்வீஸ்காக 1640 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 327 கோபுரங்கள் அமைக்கப்படும். இந்தியாவிலேயே ‘பிராட் பேண்ட்’ சேவையில் பிஎஸ்என்எல் சிறந்து விளங்குகிறது. பிராட் பேண்ட் சேவைக்காக விண்ணப்பித்தவர்கள் நேரடியாக வர தேவையில்லை. 94445 99999 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் போதும், ஊழியர்கள் வீட்டுக்கே வருவார்கள். பொது மக்களுக்கு சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் 4வது இடத்தில் உள்ளது. சேவை துரிதமாக கிடைக்க பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சேவை குறைவாக உள்ள இடங்களை உயர் அதிகாரிகள் தத்து எடுத்து பணியாற்றி வருகின்றனர். ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்துவோர், அதே எண்ணில் தான் விரும்பும் செல்போன் நிறுவனத்துக்கு மாறும் வசதி அரியானாவில் தொடங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் செல்போன் நிறுவனங்களுடன் பேசி அதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தமிழகத்தில் விரைவில் தொடங்கப் படும். இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார். துணை பொது மேலாளர் வெங்கடேசன், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக