வெள்ளி, 10 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் கணக்கை முடக்க நெருக்கடி தந்தது அமெரிக்காதான்! - பே பால்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் கணக்குகளை முடக்குமாறு தங்களை நிர்பந்தம் செய்தது அமெரிக்க அரசு என பே பால் (PayPal) அறிவித்துள்ளது.  உலகின் போலீஸ்காரராக செயல்படும் அமெரிக்காவின் இன்னொரு உளவு முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது விக்கிலீக்ஸ். பல நாடுகள் குறித்து அமெரிக்கா திரட்டிய அரசியல் ரகசிய தகவல்கள், அந்தந்த நாட்டுத் தலைவர்களை கேவலமாக விமர்தித்தது போன்ற தகவல்களை லட்சக்கணக்கான ஆவணங்கள் மூலம் வெளியிட்டு அமெரிக்காவை அதிர வைத்தது விக்கிலீக்ஸ். இதனால் அந்த இணைய தளத்தை முடக்கப் பார்த்தது அமெரிக்கா.  விக்கிலீக்ஸ் அதிபர் அஸாஞ்ஜே மீது எப்போதோ போட்ட வழக்கை புதுப்பிக்க வைத்து, அவரை பிரிட்டிஷ் போலீஸ் மூலம் கைது செய்தது. விக்கிலீக்ஸ் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டது. முக்கியமாக விக்கிலீக்ஸுக்கு வருவாய் ஆதாரமாக இருப்பது பேபால் கணக்கு மூலம் பார்வையாளர்கள் தரும் நன்கொடைதான். இந்த பேபால் கணக்கையும் முடக்கிவிட்டனர்.
ஆனால் தாங்களாக இந்த கணக்கை முடக்கவில்லை என்றும், அமெரிக்க அரசின் நெருக்கடி தாங்காமலேயே விக்கிலீக்ஸ் கணக்கை முடக்கினோம் என்றும் பேபால் அறிவித்துள்ளது. இதனை பே பால் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஒசாமா பேடியர் கூறியுள்ளார். "விக்கிலீக்ஸின் பேபால் கணக்குகள் முடக்கப்பட்டதில் அமெரிக்க அரசுக்கு பங்குள்ளது. இந்த நிறுவனம் சட்டவிரோத காரியங்களைச் செய்வதாகவும், உடனே கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இதை நேரடியாக எங்களுக்குச் சொல்லாமல், விக்கிலீக்ஸுக்கு எழுதிய கடிதம் மூலம் கூறியிருந்தனர். அமெரிக்க அரசின் விதிமுறைகளுக்குட்பட்டே இயங்க வேண்டும் என்பதாலும், சட்டவிரோதமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் வைத்திருப்பது தெரிய வந்ததாலும் உடனடியாக கணக்குகள் முடக்கப்பட்டன," என்றார்.
இதற்கிடையே, விக்கிலீக்ஸ் சட்டவிரோதமான காரியங்களைச் செய்வதாக அமெரிக்கா கூறி வருவதால், அதன் கணக்குகளில் பணம் செலுத்த விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு இனி அனுமதி இல்லை என சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
ஆனால் விக்கிலீக்ஸ் செய்வதில் சட்ட விரோதம் ஏதுமில்லை என்றும், அமெரிக்காவை சங்கடப் படுத்தும் ரகசியங்களைத்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது என்று ஆதரவுக் குரல் கிளம்பியுள்ளது. அமெரிக்காவி்ன் தவறுகள், அமெரிக்கா உளவறிந்துள்ள ரகசியங்களை வெளியிடுவது சட்டவிரோதம் ஆகாது. அப்படி எந்த அமெரிக்க சட்டமும் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார் ஜார்விஸ் என்ற பத்திரிகையாளர்.  உடனடியாக பே பால், விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் விக்கிலீக்ஸின் கணக்குகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக