செவ்வாய், 4 ஜனவரி, 2011
கேரளாவில் லஞ்சம் வாங்கினால் போலீசாருக்கு 7 வருடசிறை 12 மாத சம்பளம் அபராதம் சட்டசபையில் மசோதா நிறைவேறியது.
கேரளாவில் லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு 7 வருட சிறை தண்டணையும், 12 மாத சம்பளத்திற்கு இணையான அபராதமும் விதிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேறியது. கேரள சட்டசபையில் நேற்று போலீஸ் மசோதாவை உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு. பணியில் இருக்கும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களிடம் மரியாதையாக பழக வேண்டும். கஸ்டடியில் இருக்கும் விசாரணை கைதிகளின் புகைப்படங்கள் செய்திகளை பத்திரிகைகளுக்கு கொடுக்க கூடாது. அவர்கள் செலவுக்கு தினக்கூலியில் பாதி கொடுக்கவேண்டும். இதற்கான தொகையை ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் அரசு வழங்கும்.
பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளவேண்டும். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகிய சாட்சிகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்க கூடாது. பொது இடங்களில் பெண்களை அவமதிக்கும் வகையில் ஆபாசமாக நடப்பவர்கள், புகைப்படம், வீடியோ எடுப்பவர்களுக்கு 3 வருட சிறை, ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் போலீசாரிடம் வீட்டு வேலை எதையும் வாங்ககூடாது. போலீசார் லஞ்சம் வாங்கினால் 7 வருட சிறையும், 12 மாத சம்பளத்திற்கு இணையான அபராதமும் விதிக்கப்படும்.
பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பவர்களுக்கு ஒரு வருடம் சிறை, ரூ. 5 ஆயிரம் அபராதம், பொது இடங்களில் வாகனங்களை கழுவினாலோ, மிருகங்களை கொன்றாலோ, வளர்ப்பு மிருகங்களை அவிழ்த்து விட்டாலோ தண்டனை வழங்கப்படும். போலி ஆவணங்களை மூலம் வழக்கு பதிவு செய்யும் போலீசாருக்கு 3 வருட சிறை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா இன்று கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக