வெள்ளி, 14 ஜனவரி, 2011

மலேகான் குண்டுவெடிப்பு குறித்து மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ திட்டம்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கடந்த 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மலேகான் குண்டுவெடிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இதுத்தொடர்பாக நாசிக் நீதிமன்றத்தில் உடனடியாக மனுத்தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தா நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை தொடர்ந்து மலேகான் குண்டுவெடிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ தீர்மானித்தது. மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படை கைதுச் செய்த ஒன்பது பேரிடமும் சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளும்.
கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 31 பேர் மரணித்தனர். 312 பேருக்கு காயமேற்பட்டது. ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முதல் குண்டுவெடிப்பு இதுவாகும். இவ்வழக்கை விசாரணைச் செய்யும் பொறுப்பை பின்னர் சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அஸிமானந்தா, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தெரிவித்தார். சுனில் ஜோஷி மலேகான் குண்டுவெடிப்பை நமது ஆட்கள்தான் செய்தார்கள் என்பதை நேரில் தெரிவித்ததாகவும் அஸிமானந்தா தெரிவித்தார். ஆனால், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தது போலீசும், ஊடகங்களும்.
குண்டுவெடிப்பின் பெயரால் கைதுச் செய்யப்பட்ட நிரபராதியான அப்பாவி முஸ்லிம்கள் தற்பொழுதும் சிறையில் வாடிவருகின்றனர். முதலில் மலேகானில் யார் குண்டுவெடிப்பை நடத்தினார்கள்? என்பதற்கு பதிலளிக்க தயங்கிய சுனில்ஜோஷி பின்னர் தான் நடத்தியதாக ஒப்புக்கொண்டார் என அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, பாரத்பாயி ஆகியோர் சபரிதாமில் வந்ததையும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதே ஆண்டு ஜூன் மாதம் வல்ஸாதில் பரத் பாயின் வீட்டில் வைத்து நடந்த ரகசியக் கூட்டத்தில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர்.
அஸிமானந்தாவுடன் பரத்பாயி, பிரக்யாசிங், சுனில்ஜோஷி, சந்தீப் டாங்கே, ராம்ஜி, லோகேஷ் சர்மா, அமித் ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
மலேகான் குண்டுவெடிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்துவது ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பலரின் பங்கினை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என புலனாய்வு ஏஜன்சிகள் கருதுகின்றன.

0 comments:

கருத்துரையிடுக