வெள்ளி, 14 ஜனவரி, 2011

மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து டெல்லியில் இன்று பந்த்.

புதுடெல்லி,ஜன.14:நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகே அமைந்திருந்த மஸ்ஜித் நூரை இடித்துத் தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தை(டி.டி.எ) கண்டித்து டெல்லியில் இன்று முஸ்லிம் அமைப்புகள் முழுஅடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளன. இன்று டெல்லி இமாம் செய்யத் அஹ்மத் புஹாரியின் தலைமையில் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நடைபெறும். இடிக்கப்பட்ட மஸ்ஜிதை உடனடியாக கட்டவேண்டுமெனவும், போலீஸ் அடக்குமுறையைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் எனக்கோரியும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
மஸ்ஜித் இடித்த இடத்தை டி.டி.ஏ விடமிருந்து பெற்று மீண்டும் மஸ்ஜித் கட்டுவதற்கு ஒப்படைக்கப்படும் என தன்னைக் காணவந்த முஸ்லிம் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.
முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துவார்கள். அதேவேளையில், மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடமும், அதன் சுற்றுவட்டாரமும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது எனவும், அதற்கான ஆதாரங்கள் தங்கள் வசமிருப்பதாகவும் டெல்லி வக்ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அறிவித்துள்ளது. ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நிஸாமுத்தீன் போலீஸ் நிலையத்திற்கு முன்பு உள்ளூர் மக்களின் கண்டனப் போராட்டம் தொடர்கிறது.
ஜங்க்புரா எம்.எல்.ஏ தர்வீந்தர் சிங்கின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், மோதல் சூழலை தணிக்கும் விதமாக நேற்று அஸர் மற்றும் மஃரிப் தொழுகைகளை நிறைவேற்ற மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக