வெள்ளி, 21 ஜனவரி, 2011

கருப்புப் பணத்தை உடனே மீட்டுக் கொண்டு வர வழியில்லை-பிரதமர்.

இந்தியாவின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ள நிலையில், கருப்புப் பணத்தை மீட்டு கொண்டு வர உடனடி தீர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். கருப்புப் பண விவகார வழக்கில் மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம். நாட்டையே கொள்ளையடித்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை திருடியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக கேட்டுள்ளது. இந்தப் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டேயாக வேண்டும் என்றும் கண்டித்துள்ளது.
ஆனால் இதற்கு நேர் மாறாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்து நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அமைச்சரவை மாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் கருப்புப் பணத்தை உடனடியாக மீட்டுக் கொண்டு வர நம்மிடம் எந்தத் தீர்வும் இல்லை.
கருப்புப் பணம் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்குத் தெரிவிப்போம். அதேசமயம், இதை பகிரங்கமாக அனைவருக்கும் தெரியப்படுத்த முடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.
நமக்கு சில தகவல்கள் (ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியல்) வந்துள்ளன. அதேபோல மற்ற நாடுகளிடமிருந்தும் தகவல்களைப் பெறுவோம். இவற்றுக்கு உரியவர்களிடமிருந்து உரிய வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்படும் என்றார் பிரதமர்.
பிரதமர் அளித்துள்ள பதிலைப் பார்க்கும்போது கருப்புப் பணம் வைத்திருப்போர் குறித்த பட்டியலை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்காது என்று தெளிவாகத் தெரிய வருகிறது. மேலும், இந்தப் பணத்துக்கு ஒரு வரியை போட்டு அதை வசூலித்து விட்டு, அந்தப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ள மத்திய அரசே வழி வகுத்துக் கொடுக்கப் போவதும் தெரிய வருகிறது. ஆனால் இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதை ஏதோ ஒரு வரி ஏய்ப்புப் பிரச்சினை போல பார்க்கிறது மத்திய அரசு. ஆனால் உண்மையில் இது மிகப் பெரிய பொருளாதாரக் கொள்ளை என்று உச்சநீதிமன்றம் சாடியது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் கருப்புப் பண விவகாரம் மத்திய அரசுக்குப் புதிய தலைவலியைக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக