வெள்ளி, 21 ஜனவரி, 2011
விக்கிலீக்ஸ் வெளியிடப் போகும் சுவிஸ் வங்கிக் கணக்குப் பட்டியலில் இந்தியர்கள்
விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ள சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியலில் இந்தியர்களின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அன்னா இன்வெஸ்ட்மென்ட்ஸ், அன்னபூர்ணா கன்வெர்டிபிள ஆகிய இரு இந்திய நிறுவனங்கள் குறித்த விவரம் இதில் இடம் பெற்றுள்ளது. அது தவிர இந்தியர்களான ஆசாத் அலி கான் மற்றும் அவரது மனைவி ஜாஹிதா அலி கான் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
ஜூலியஸ் பேயர் என்ற சுவிஸ் வங்கியின் முன்னாள் தலைவரான ருடால்ப் எல்மர், 2 சிடிக்களில் பேயர் வங்கியில் கணக்கு வைத்துள்ள பல்வேறு முக்கியஸ்தர்களின் விவரங்களை விக்கிலீக்ஸிடம் அளித்துள்ளார். அதில்தான் இந்த இந்தியப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஹெட்லைன்ஸ் டுடே டிவி இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. எல்மருடன் தொடர்பு கொண்டு அவரிடமிருந்து இந்த விவரங்களைப் பெற்றதாக ஹெட்லைன்ஸ், கூறியுள்ளது.
இந்த பேட்டியின்போது சுவிஸ் வங்கிகளில் எப்படிப் பணத்தைப் போடுகிறார்கள், வங்கிக் கணக்குகள் எப்படி தொடங்கப்படுகின்றன. என்ன மாதிரியான முறையில் பணத்தை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளார் எல்மர்.
எல்மர் கொடுத்துள்ள பட்டியலில் மொத்தம் 2000 கணக்குகள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில், அன்னபூர்ணா என்ற பெயரில் மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று கணக்குகளும், நியூயார்க்கில் உள்ள பேயர் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்டுள்ளன.
அவை - அன்னபூர்ணா கன்வெர்டிபிள் லிமிட்டெட், அன்னபூர்ணா லீவரேஜ், அன்னபூர்ணா கன்வெர்டிபிள் என்பதாகும். இந்த மூன்று நிறுவனங்கள் பெயரிலும் பல கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா கன்வெர்டிபிள் லிமிட்டெட் நிறுவனத்தின் பெயரில் மட்டும் ரூ. 259 கோடி பணத்தை குவித்துள்ளனர். லீவரேஜ் பெயரில் ரூ. 84 கோடியும், அன்னபூர்ணா கன்வெர்டிபிள் நிறுவனப் பெயரில் ரூ. 45 கோடியும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளராகவும், கணக்குகளைப் பராமரிப்பவராகவும், ஒரே நிறுவனத்தின் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, பி்ஸ்ச் அஸட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பியஸ் பிஸ்ச்.
இந்த அன்னபூர்ணா நிறுவனங்கள் யாருடையவை, யார் இதன் பினாமி, எந்த அரசியல் பிரமுகர் அல்லது தொழிலதிபரின் நிறுவனங்கள் இவை என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய அரசு இதை விசாரித்தால் மிகப் பெரிய தகவல்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது.
இதேபோல இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு இந்தியப் பெயர் ஆசாத் அலி கான் மற்றும் அவரது மனைவி ஜாஹிதா அலிகான். கேமேன் தீவில் உள்ள பேயர் வங்கியில், ஆசாத் அலிகான் மிகப் பெரிய தொகையை போட்டு வைத்துள்ளார். இந்தியர்கள் இத்தனை பேர்தான் இப்பட்டியலில் உள்ளனரா, அல்லது வேறு பலரும் உள்ளனரா என்பது தெரியவில்லை. விக்கிலீக்ஸ் இந்தப் பட்டியலை முழுமையாக வெளியிடும்போது அதுகுறித்துத் தெரிய வரலாம்
0 comments:
கருத்துரையிடுக