செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் போன்கள் ஒட்டுக்கேட்பு! - உச்ச நீதிமன்றத்தில் தகவல்.
வருடத்துக்கு 1 லட்சம் முக்கிய போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தகவல் தெரிய வந்துள்ளது.அரசு உத்தரவின்பேரில் போன்களை ஒட்டுக்கேட்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அளித்த தகவலில், தங்கள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே ஆண்டுக்கு 30000 போன் எண்களை ஒட்டுக் கேட்குமாறு அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினர். ஒரு தனி நிறுவனம் இத்தனை போன்களை ஒட்டுக்கேட்கும்போது, மொத்தமுள்ள தொலைபேசி நிறுவனங்கள் சராசரியாக ஒட்டுக் கேட்கும் எண்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, தோராயமாக ஒரு லட்சம் போன்கள் இப்படி ஒட்டுக்கேட்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களில் மட்டுமே 3588 பேரின் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றனவாம்.
"போன்களை ஒட்டுக்கேட்பது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியக் கடமையாகிறது. இது உரிமம் பெறும் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ 50 கோடி அபராதம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், அரசு சொல்லும்படி நாங்கள் ஒட்டுக்கேட்டு தகவலை சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்குத் தருகிறோம்", என ரிலையன்ஸ் தெரிவித்தது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் 15.25 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 12.57 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது ரிலையன்ஸ். வோடபோன் 12.43 கோடி சந்தாதாரர்ரளுடன் மூன்றாம் இடத்திலும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 8.67 கோடி வாடிக்கையாளர்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.
0 comments:
கருத்துரையிடுக