வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

'எகிப்து' என்று இன்டர்நெட்டில் 'சர்ச்' செய்ய சீனா தடை!

சீனாக்காரர்களுக்கு தங்களது நாட்டவர்களை எப்போதும் எதிலாவது கட்டுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் போல. இப்போது இன்டர்நெட் சர்ச் என்ஜின்களில் எகிப்து என்ற வார்த்தையைத் தடை விதித்துள்ளனர். எகிப்தில் நடந்து வரும் மக்கள் போராட்டத்தால் உலகமே அந்த நாட்டின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது. முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் மிகப் பெரிய போராட்டத்தால் அரபு நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ளன. குறிப்பாக சர்வாதிகாரமாக ஆட்சி நடத்தி வருவோர் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சீன அரசு, எகிப்து என்ற பெயரை இன்டர்நெட்டில் தேட தடை விதித்துள்ளது. சீனாவில் பேச்சு, எழுத்து என்று எந்தவகையான சுதந்திரமும் கிடையாது. குறிப்பாக அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறவே முடியாது. அரசுக்கு எதிராக நடந்த ஜனநாயகம் கோரிய போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கிய வரலாறு சீனாவிடம் உண்டு. தியானன்மன் சதுக்கத்தில் ஓடிய ரத்த ஆறை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் எகிப்து போராட்டத்தால் உஷாராகியுள்ள சீனா, மக்களுக்கு எகிப்து குறித்து எதுவும் தெரியாமல் பார்த்துக் கொள்வதில் தனி அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக எகிப்து என்ற வார்த்தையை இன்டர்நெட்டில் தேட தடை விதித்துள்ளது. நாட்டின் முன்னணி சர்ச் என்ஜின்களான Sina.com மற்றும் Netease.com ஆகிய இரு இணையதளங்களிலும் எகிப்து என்ற வார்த்தையைத் தேட முடியாமல் தடுத்து வைத்துள்ளனர். Weibo என்கிற ட்விட்டருக்கு இணையான இணையதளத்திலும் கூட எகிப்து என்ற வார்த்தையை தேட முடியாமல் செய்துள்ளனர்.
எகிப்து குறித்து மக்கள் சாட்கள் மூலம் பேசிக் கொண்டாலும் கூட எகிப்து குறித்து அறிய அந்த வார்த்தையை பயன்படுத்தி தேட முடியாதபடி செய்துள்ளனர் சீனத் தலைவர்கள். மேலும் எகிப்து போராட்டம் குறித்து சீன அரசு ஆதரவு நாளிதழ்கள், இணையதளங்களிலும் அந்தப் போராட்டத்தை தேவையில்லாத ஒன்று என்பது போல தலையங்கம் எழுதி வருகின்றனர். அதாவது, ஜனநாயகத்தை விரும்பாத ஒரு இடத்தில் அதை திணிக்க முயன்றால் இதுபோன்ற குழப்பங்கள்தான் ஏற்படும் என்பது போல எழுதி வருகின்றனர். மேலும் துனிஷியா, எகிப்தில் நடைபெறும் போராட்டங்களால் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியாது என்றும் எழுதியுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக