வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழு: தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கடந்த வாரம் தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று காலை தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் கலெக்டர் காமராஜ், வருவாய் அதிகாரி முருகேஷ், மாநகராட்சி துணை ஆணையர் தற்பகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டசபைக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் பார்வையிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
கடந்த 10.1.11 அன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் இடம் பெற்று உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் இன்னும் ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
வருகிற 19, 20-ந்தேதிகளில் தொகுதிகள் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் முகவரி, பெயர் திருத்தம் போன்ற திருத்தங்களை மாற்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் தொகுதிகள் மாறி இருந்தாலும் மாற்றி கொள்ளலாம். 
வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் ரூ.15 செலுத்தி புதிய வாக்காளர் அட்டை பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின்போது 46 துணை ராணுவ படை வரவழைக்கப்பட்டது. 
இந்த ஆண்டு தேவையான அளவு துணை ராணுவ படை வரவழைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.10 லட்சம் வரை செலவு செய்ய விதி உள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளர் தனி அக்கவுண்ட் ஓப்பன் செய்து செலவு செய்ய வேண்டும்.அதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். நடந்து முடிந்த பீகார் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. 
அதே போல தமிழகத்திலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பதற்கான வழி முறைகளை மத்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக