செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
எகிப்தில் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் மறுப்பு: ராணுவ டாங்கிகள் முன்பு மறியல்
கடந்த 30 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி கடந்த 2 வாரங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதுவரை சுமார் 200 பேர் பலியாகி உள்ளனர். இருந்தும் அவர் பதவி விலக மறுத்து வருகிறார். செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு பிறகு பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தனது மந்திரி சபையை கலைத்துவிட்டு மாற்றி அமைத்துள்ளார். இருந்தும் போராட்டம் ஓயவில்லை. எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இணை அதிபர் ஒமர்சுலைமான், எதிர்க் கட்சியினருடன் பேச்சு நடத்தினார். அப்போது அரசியல் சட்டத்தில் மறுசீரமைப்பு செய்வது என அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் போராட்டம் தீவிரமடையாமல் மந்தமானது.
இதற்கிடையே ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி அரசு ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் முதல் 15 சதவீதம் சம்பள உயர்வு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு 650 கோடி எகிப்து பவுண்டு பென்சன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் மறுத்துவிட்டனர். இன்னும் ஏராளமானவர்கள் போராட்டம் நடைபெறும் தஹ்ரீர் சதுக்கத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியுள்ளனர்.
இது போன்ற சலுகைகளை அறிவித்து அதிபர் முபாரக் மக்களை ஏமாற்றுகிறார். எனவே அவரது வாக்குறுதிகளை நம்ப முடியாது. உடனடியாக அவர் பதவி விலகுவதன் மூலம்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவிக்கின்றனர்.
தஹ்ரீர் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ டாங்கிகள் முன்பு அமர்ந்து மறியல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த ராணுவ வீரர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட வெளிநாடுகளில் வாழும் எகிப்தியினர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களும் போராட்டத்தில் களம் இறங்க ஆர்வமுடன் உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக