ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

எகிப்தை தொடர்ந்து அல்ஜீரியா-ஏமனில் மக்கள் புரட்சி: அதிபர்களுக்கு எதிராக போராட்டம்.

அல்ஜியர்ஸ் & சனா: எகிப்தை தொடர்ந்து அல்ஜீரியா மற்றும் ஏமன் நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அந் நாடுகளின் சர்வாதிகார அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். கடந்த மாதம் ஆப்பிரிக்க நாடான சூடானில் தென் பகுதி மக்கள் புரட்சி நடத்தி தனி நாட்டை உருவாக்கினர். இதையடுத்து துனிசியா நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அந் நாட்டு அதிபர் நாட்டை விட்டு ஓடினார். இதை தொடர்ந்து பக்கத்து நாடானா எகிப்திலும் மக்கள் புரட்சி வெடித்ததால் 30 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வந்த அதிபர் முபாரக் பதவி விலக நேர்ந்தது.

இதையடுத்து மற்ற ஆப்பிரிக்க நாடுகளான அல்ஜீரியா, ஏமனிலும் அந் நாட்டு அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அல்ஜீரியாவில் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அப்துல் அஜிஸ் பெளடிபிளகா சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். எகிப்தில் புரட்சி வெற்றி பெற்றதையடுத்து அல்ஜீரிய மக்கள் அதிபருக்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைநகர் அல்ஜீயர்சில் ஆயிரக்கணக்காக மக்கள் தெருக்களில் குவிந்து அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து தலைநகர் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசாரை அதிபர் குவித்துள்ளார். அவர்கள் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இதனால் பல இடங்களில் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் பிற பகுதிகளிலும் போராட்டம் பரவி வருவதையடுத்து நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 
அதே போல கடந்த 32 ஆண்டுகளாக பதவியில் உள்ள ஏமன் நாட்டு அதிபர் அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஏமன் தலைநகர் சனாவில் உள்ள எகிப்து தூதரகம் அருகே ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி இந்தப் போராட்டத்தை நடத்தினர். ஏமன் அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பி, அவர் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்களுக்கும் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இந் நிலையில் தனது பதவிக் காலம் 2013ம் ஆண்டு வரை உள்ளதாகவும் அதன் பின்னரே பதவி விலகுவேன் என்றும் அதிபர் சலே அறிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக