ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

துணை அதிபரிடம் ஆட்சியை கொடுத்து விட்டு எகிப்து அதிபர் முபாரக் நாட்டை விட்டு ஓட்டம்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலை நகர் கெய்ரோவில் உள்ள தக்ரிர் சதுக்கத்தில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தும், அதிபர் முபாரக் பதவி விலக மறுத்து வருகிறார். தற்போது இப்போராட்டத்தில், டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர். 
இதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து தீவிரமாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை தாக்கவோ அவர்களை அடக்கவோ ராணுவம் மறுத்து விட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தக்ரிர் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். முன்னதாக அதிபர் முபாரக்குடன் பேச்சு நடத்த ராணுவ உயர் அதிகாரிகள் குழுவினர் சென்றனர். ஆட்சி மாற்றம் குறித்து அதிபருடன் பேச்சு நடத்தினர். 

இதற்கிடையே, தகவல் துறை மந்திரி அனாசல்-பிக்கி டி.வி.யில் தோன்றி பேசினார். அதிபர் பதவியில் இருந்து முபாரக் பதவி விலக மாட்டார். அவர் ராஜினாமா என்ற பேச்சுக்கே இட மில்லை என்றார். இதனால், தக்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே ராணுவ கமாண்டர் ஜெனரல் ஹாசன் அல்-ரோயினி பேசினார். அதிபர் முபாரக் மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லா விட்டால் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று மிரட்டல் விடுத்தார். 

இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியால் கரவொலி எழுப்பினார்கள். இன்று காலை முபாரக் டெலிவிஷனில் உரை யாற்றினார். அப்போது, நான் வெளிநாடுகளின் உத்தரவுக்கு (அமெரிக்காவுக்கு) கட்டுப்பட்டு உடனடியாக பதவி விலகமாட்டேன். வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தல் வரை பதவியில் நீடிப்பேன். அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டேன். 

தேர்தலில் வெற்றி பெறுபவர்களிடம் எகிப்தை பாதுகாப்பாக ஒப்படைப்பேன். அரசியலமைப்பு சட்டப்படி துணை அதிபரிடம் அதிகாரத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். எனவே, எனது உயிர் உள்ளவரை எகிப்தை விட்டு செல்ல மாட்டேன். எனது உடல் எகிப்து மண்ணில் தான் புதைக்கப்படும்” என்றார். அவரது பேச்சை தொடர்ந்து தக்ரிர் மைதானத்தில் கூடி யிருந்த பொதுமக்கள் கொந்தளித்தனர். முபாரக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தங்களது ஷீக்களை தூக்கி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். 

இதற்கிடையே, அதிபரின் பேச்சை தொடர்ந்து துணை அதிபர் ஒமர் சுலைமான் போராட்டக்காரர்களிடம் பேசினர். அப்போது, “அனைவரும் வீடுகளுக்கு செல்லுங்கள், உங்களின் அன்றாட பணிகளை கவனியுங்கள், எகிப்தையும், மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அதிபர் என்னிடம் ஒப்படைத்து இருக்கிறார். எனவே, அனைவரும் சமாதானம் அடைந்து தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள். இளைஞர்களின் எழுச்சியை தொடர்ந்து உங்களின் கோரிக்கைககள் (அதிபர் பதவி விலகுதல்) பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

எனவே அனைவரும் அரசுடன் கைகோர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. முபாரக்குக்கு எதிராக கோஷம் எழுப்பினர். வெள்ளிக் கிழமையான இன்று தொழுகை நடத்தி விட்டு அதிபர் அரண்மனைக்கு ஊர்வலமாக சென்று அதிரடி முற்றுகையிட முடிவு செய்தனர். 

இதனால் பயந்து போன முபாரக் எகிப்தை விட்டு ஓடிவிட்டதாக தகவல் பரவியுள்ளது. அவர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் அல்-ஹீரா என்ற டெலிவிஷன் தெரிவித்துள்ளது. ஈரான் பத்திரிகை ஒன்றும் முபாரக் ஓடி விட்டதாக செய்தி வெளியிட்டு உள்ளது. அவர் செங்கடலில் உள்ள சுற்றுலா பூங்கா ஒன்றில் தங்கி இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக