சனி, 12 மார்ச், 2011
ஜப்பானில் நிலநடுக்க பலி 1000 ஆக உயர்ந்தது
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 400 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. 33 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கார்கள், பேருந்துகள், இரயில், வீடுகள் என ஒரு நகரையே கடல் நீர் அடித்துச் சென்றது. கடலோரப் பகுதிகளில் மின்சாரமும் தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. மியாகி மாநிலத்தில் உள்ள செண்டாய் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானங்களையும், கார்களையும் கடல்நீர் அடித்துச் சென்றது.
நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலும் கட்டுக்கடங்காமல் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
செண்டாய் நகரின் ஒரு பகுதியில் மட்டும் 200 முதல் 300 உடல்கள் கிடைத்திருக்கின்றன. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக