புதன், 13 ஏப்ரல், 2011
ஓட்டு போடுவது எப்படி? வாக்காளர் கவனத்துக்கு.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள இடம், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், பாகம் எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை தேர்தல் ஆணையமே இந்த முறை வழங்கியுள்ளது. இதை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து வாக்களிக்கலாம்.
மேலே குறிப்பிட்ட 2 ஆவணங்களும் இல்லை என்றால், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய 13 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். (இப்படி ஆவணங்களை எடுத்துச் செல்பவர்களுக்கு வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.)
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அழுத்தியதும் ‘பீப்’ என்ற சத்தம் வருகிறதா என்று வாக்காளர் கவனிக்க வேண்டும்.
வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குச்சாவடி தலைமை அதிகாரியிடம் தங்களது விருப்பத்தை தெரிவித்து, அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இப்படி ‘49 ஓ’வில் வாக்குப் பதிவு செய்பவர்களுக்கும் விரலில் மை இடப்படும்.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வரும்போது உடன் ஒருவர் அனுமதிக்கப்படுவார். அவர் வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரியிடம் அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும்.
வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி வளாகத்திலேயே பூத் சிலிப் வழங்க, வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டு இருக்கும். பூத் சிலிப் வாங்காதவர்கள் இந்த மையத்தில் பெற்றுக் கொண்டு வாக்களிக்க போகலாம்.
வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிந்த பிறகு வாக்களிக்க முடியாது. 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

0 comments:
கருத்துரையிடுக