புதன், 13 ஏப்ரல், 2011
தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கலாட்டா: ஒருவர் பலி.: சமுதாயத்தின் அவலநிலை
குலசேகரம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மாகின். இவரது மகன் சதாம் உசேன் (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் குலசேகரம் சந்தை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அப்போது, பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ஜெயசிங் (40) என்பவர் மது வாங்க அதே கடைக்கு வந்தார். இவர் ஒரு இறைச்சி வியாபாரி. தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று முன்தினம் மாலை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதில் வாலிபர் சதாம் உசேனும், ஜெயசிங்கும் முண்டியடித்து கொண்டு, மது வாங்க முயன்றனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயசிங் கையில் இருந்த கத்தியால் சதாம்உசேனின் காது அருகே குத்தியதாக கூறப்படுகிறது. கத்தி ஆழமாக பதிந்ததால் சதாம்உசேன், வலியால் துடித்து மயங்கி விழுந்தார். உடனே, அருகில் நின்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே ஜெயசிங்கை சுற்றி பிடிக்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால், அவர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். தப்பிஓடிய ஜெயசிங்கை தேடி வருகிறார்கள்.

0 comments:
கருத்துரையிடுக